Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெகபூபா முஃப்தி பதவி ஏற்றார்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராக மெகபூபா முஃப்தி (56) இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவி ஏற்பு விழாவில், மத்திய அமைச்சர்கள் வெங்கைய்யா நாயுடு, ஜிதேந்திரா சிங், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்த முஃப்தி முகமது சயீத், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 7–ம் தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அங்கு புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டதால் ஜனாதிபதி ஆட்சி அமலானது.

இந்நிலையில், டெல்லியில் கடந்த மாதம் 22–ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை முஃப்தி முகமது சயீத்தின் மகள் மெகபூபா சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து காஷ்மீரில் புதிய அரசு அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. கடந்த மாதம் 24–ம் தேதி ஸ்ரீநகரில் மெகபூபாவின் இல்லத்தில் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூடி, மெகபூபாவை முறைப்படி சட்டசபை கட்சி தலைவராக (முதல் மந்திரியாக) ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர்.

இதையடுத்து, கவர்னர் வோராவை மெகபூபா சந்தித்து புதிய அரசு அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரினார். அவரை தொடர்ந்து, கவர்னரை பா.ஜ.க. சட்டசபை கட்சி தலைவராக (துணை முதல்–மந்திரியாக) தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மல் சிங் சந்தித்தார். அவர் மெகபூபா தலைமையில் புதிய அரசு அமைப்பதற்கு கட்சியின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் அளித்தார். இதை தொடர்ந்து, மெகபூபா முஃப்தி ஏப்ரல் 4-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜம்மு நகரில் உள்ள கவர்னர் மாளிகையில் காஷ்மீர் மாநிலத்தின் 13–வது முதலமைச்சராக மெகபூபா மஃப்தி இன்று காலை 11 மணியளவில் பதவி ஏற்று கொண்டார். இதன்மூலம், அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற சிறப்பை மெகபூபா பெற்றார். மேலும், மாநில துணை முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த டாக்டர் நிர்மல் சிங் மற்றும் இதர அமைச்சர்களுக்கும் கவர்னர் வோரா பதவிப் பிரமாணமும், காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ