Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் வரி ஏய்ப்புக்காக வெளிநாடுகளில் சொத்து குவித்தார்களா?

புதுடெல்லி; வரியிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளில் சொத்து குவித்த இந்தியர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

வரி கட்டாமல் தப்பிக்க என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதைத் தேடிக் கண்டுபிடிப்பதில் கில்லாடிகள் இந்தியப் பணக்காரர்கள். இந்தியாவின் முதல் பணக்காரர் அம்பானியிலிருந்து அரசு ஊழியர்கள் வரை வரி கட்டாமல் இருக்கும் வழிகளைத் தொடர்ந்து தேடிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் சட்டங்களுக்கு உட்பட்டு இன்ஷூரன்ஸ் எடுப்பதிலிருந்து, பிபிஎஃப் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வது வரை என பல வகைகளிலும் வரியைச் சேமித்துக்கொள்ள முடியும். ஆனால் பெரும் பணம் படைத்தவர்கள் மட்டுமே செய்ய முடிந்ததுதான், இது போல வெளிநாடுகளில் சொத்து குவிப்பது.

2004 வரை ரூபாயை டாலராக மாற்றி வெளியேக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை வைத்திருந்தது. 2004 பிப்ரவரியில் முதல்முறையாக எல்.ஆர்.எஸ் என்ற திட்டம் மூலம் வருடத்திற்கு 25000 டாலர்கள் வரை கொண்டு செல்லலாம் என்றிருந்தது. அந்தப் பணம் கல்வி, மருத்துவம், பங்குகள் போன்ற செலவுகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது அந்தத் தொகையை அப்படியே சேமித்தும் வைக்கலாம். இது தற்போது 2.5 லட்சம் டாலராக உள்ளது.

அதேபோல் வெளிநாடுகளில் நிறுவனங்களைத் தொடங்க அனுமதி இல்லை என்று இருந்த நிபந்தனைகள் நாளடைவில் பங்குதாரராக இருக்கலாம், ஏற்கெனவே உள்ள நிறுவனத்தை வாங்கலாம் என்பது போல மாறியது. இவற்றை வாய்ப்பாகப் பயன்படுத்தி, நாடுகளின் முன்னாள், இந்நாள் தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபல நடிகர்கள் வரி கட்டாமல் தப்பிக்க தங்களுடைய வருமானத்தை வெளிநாடுகளில் கொண்டு போய் சொத்துக்களாக வாங்கி குவித்துள்ளனர்.

இது போன்ற நடவடிக்கைகளுக்கு தேவையான சட்ட நடைமுறை சேவைகளைச் செய்துவரும் மொசாக் ஃபான்செகா நிறுவனம்,  11.5 மில்லியன் கணக்கிலான பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது. இதில் முறைகேடான பதிவுகளைச் செய்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது. இவற்றில் இந்தியாவிலிருந்து மட்டும் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். உலகிலேயே அதிகளவில் வெளிநாடுகளில் மறைமுக சொத்து சேர்த்ததில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இப்பட்டியலில் உள்ளன. மேலும் டிஎல்எஃப் நிறுவன உரிமையாளர் கேபி சிங், அவரது குடும்பத்தினர் மற்றும் அதானி சகோதரர்கள் ஆகியோரும் உள்ளனர். இவை பெரும்பாலும் பினாமிகள் பெயரிலும், டிரஸ்ட்டுகள், ஃபவுண்டேஷன்கள் மூலமும் கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியப் பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், சவுதி அரேபியா மன்னர், லயனல் மெஸ்ஸி ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர். இன்னும் முழு விவரங்களுடனான பட்டியல் வெளியாகவில்லை. இதற்கு மிக முக்கிய காரணமாக ரிசர்வ் வங்கி இருப்பதால், இதற்கான முழு பொறுப்பும் அதற்கானதுதான். எனவே ரிசர்வ் வங்கி இதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்?

- ஜெ.சரவணன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ