Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமலா அத்வானி மரணம்: ஜனாதிபதி, பிரதமர், தலைவர்கள் இரங்கல்!

புதுடெல்லி: பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் மனைவி கமலா நேற்று மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, துணை பிரதமராகவும், மத்திய அமைச்சரவையில் முக்கிய துறைகளில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவருடைய மனைவி கமலா. இவர்களுக்கு 1965–ம் ஆண்டு பிப்ரவரி 25–ம் தேதி திருமணம் நடந்தது. அத்வானி–கமலா தம்பதிக்கு பிரதிபா என்ற மகளும், ஜெயந்த் என்ற மகனும் உள்ளனர். இந்த தம்பதிக்கு திருமணமாகி 51 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஆண்டு தான் இந்த தம்பதி தங்களுடைய 50–வது ஆண்டு திருமண விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

சமீபகாலமாக கமலா உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், 83 வயதாகும் கமலாவுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதுடன், மூச்சுத்திணறலாலும் அவர் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி கமலா நேற்று மாலை மரணம் அடைந்தார்.

கமலாவின் மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், முதல்வர்கள் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, பிரகாஷ்சிங் பாதல், அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்பட பல தலைவர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''கமலா அத்வானி மறைவு மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவர் அத்வானிக்கு மட்டுமல்லாமல் கட்சி தொண்டர்களுக்கும் ஊக்கம் அளித்து வந்தார். அத்வானிக்கு பக்கபலமாகவும், தூணாகவும் விளங்கினார். கமலா அத்வானியிடம் பலமுறை கலந்துரையாடியதை தற்போது எண்ணி பார்க்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அத்வானிக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ