Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பீகாரில் பூரண மதுவிலக்கு: குடியை நிறுத்த முடியாமல் 750 பேருக்கு உடல்நல பாதிப்பு!

பாட்னா: பீகார் மாநிலத்தில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், குடியை நிறுத்த முடியாமல் 750 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.

பீகார் மாநிலத்தில் முழு அளவில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார், தேர்தலின் போது வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்றதும், பீகார் மாநிலத்தில் அவர் மது விலக்கு கொண்டு வந்தார். ஏப்ரல் 1–ம் தேதி முதல், பீகாரில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அம்மாநிலத்தில் இருந்த மதுக்கடைகளும், கள் மற்றும் சாராயக் கடைகளும் மூடப்பட்டன. ஓட்டல்களில் இயங்கி வந்த பார்களும் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மாநிலத்தில் பூரண மது விலக்கை தீவிரமாக அமல்படுத்தவும், கண்காணிக்கவும் நிதிஷ்குமார் தனிப்படை அமைத்துள்ளார். மாநில அரசின் இந்த முடிவுக்கு, அம்மாநில பெண்கள் அமைப்பினர் மிகுந்த வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் ஏ.என்.சிங், பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "தனிப்பட்ட நபர் என்ன சாப்பிட வேண்டும், என்ன குடிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. அப்படி தலையிட்டு தடை விதிப்பது மனித உரிமை மீறல் ஆகும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

விரைவில் இந்த மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில், தினமும் மதுகுடித்து பழக்கப்பட்டு போதைக்கு அடிமையாகிவிட்டவர்களால் மது பழக்கத்தை உடனே நிறுத்த முடியவில்லை. இதனால், பீகாரில் பலருக்கு கை கால்களில் நடுக்கம் ஏற்பட்டு, நரம்பு தளர்ச்சி மற்றும் செயல்பட முடியாமையால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இரண்டு, மூன்று நாட்கள் வரை மது இல்லாமல் சமாளித்தவர்கள், அடுத்தடுத்த நாட்களில் சமாளிக்க முடியாமல் சுமார் 750 பேருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பீகார் மாநிலத்தில், குடிபோதைக்கு அடிமையானவர்களுக்கு உதவ மாநிலம் முழுவதும் 38 இடங்களில் போதை மறுவாழ்வு மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில், மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுமார் 150 மருத்துவர்களும், 45 பயிற்சி பெற்ற ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, அந்த மையங்களில் போதைக்கு அடிமையானவர்களும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ