Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உங்கள் ஆரோக்கியத்தில் மோடிக்கு உண்மையிலேயே அக்கறை உள்ளதா?' -அதிர வைக்கும் ஓர் ரிப்போர்ட்!

'பூமியின் ஒரு பகுதியினர் எப்படி இறந்து போனார்கள்? (How the other Half dies?)' -பிரான்சில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட, சூசன் ஜார்ஜ் என்ற சமூகவியல் அறிஞர் எழுதிய இந்தப் புத்தகம்,  பல அதிர்வுகளைக் கிளப்புகிறது.

இந்திய பசுமைப்புரட்சியின் தொடக்கத்தில் அவர் இந்தப் புத்தகத்தை எழுதினார். ' பசுமைப் புரட்சி  என்ற பெயரில் பாரம்பர்ய நெல் ரகங்களை அழித்ததன் விளைவை இந்தியர்கள் அனுபவிக்கப் போகிறார்கள்' என முன்கூட்டியே அவர் கணித்தார். இன்றைக்கு உலகளவில் 8 சதவீத சர்க்கரை நோயாளிகள் இருப்பது இந்தியாவில்தான். இதில், பத்தில் ஒருவர் தமிழர் என்பதில் நாம் பெருமை(?)ப்பட்டுக் கொள்ளலாம்.

இப்போது இதைச் சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. இன்றைக்கு உலக சுகாதார தினம். இந்த ஆண்டிற்கான மையப் பொருளாக WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் எடுத்திருக்கும் தலைப்பு, 'சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவோம் (BEAT DIABETES)' என்பதுதான். 'ஒவ்வொரு குடிமகனும் சுகாதாரமாக இருந்தால்தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும்' என பத்திரிகை விளம்பரத்தில் சிரித்துக் கொண்டு பேசுகிறார் பிரதமர் மோடி. பிரதமரின் விளம்பரத்திற்குக் கீழேயே, இந்திய மருத்துவர் ஒருவர், 'சர்க்கரை நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகளை மூன்றில் ஒரு பங்கு விலை மட்டும் வைத்து விற்போம்' எனத் தீர்மானமாகச் சொல்கிறார். இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது உண்மையிலேயே மனம் வலிக்கிறது.

சர்க்கரை நோய்க்கு மருந்துகளைத் தயாரித்து வந்த இந்திய சுதேசி மருந்து கம்பெனிகளை இழுத்து மூட வைப்பதற்காக, 'டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும் மருந்து மட்டுமே தரமானது' என தெருவுக்கு தெரு கூவி, நமது மருந்து சந்தையை இழுத்து மூடிய நல்லவர்கள்தான் இவர்கள். 'பாரம்பர்ய நெல் ரகங்களை தொலைத்ததால் சர்க்கரை நோய்க்கு ஆளானோம். சிறுதானிய உணவுகளுக்கு மாறினால் சர்க்கரை குறைபாட்டை நாற்பது சதவீதம் அளவுக்குக் குறைக்கலாம்' என வீதிக்கு வீதி பச்சைத் துண்டோடு அலைந்து திரிந்த நம்மாழ்வாரின் கருத்துக்கள் எல்லாம்,  அரசின் ரேஷன் கடைகளுக்கு எட்டவே இல்லை. எட்டப்போவதும் இல்லை. உலகில் சர்க்கரை வியாதி உச்சகட்டமாக ஆட ஆரம்பித்தது ராகி, கம்பு, சாமை, குதிரைவாலி என்பதெல்லாம் போய், அரிசி முக்கிய உணவாக மாறிய அன்றுதான். அதுவரையில், பணக்கார வியாதியாகப் பார்க்கப்பட்ட சர்க்கரை இன்று குழந்தை பிறக்கும்போது சேர்த்தே பிறக்கிறது. நமது உடலின் கணையத்தில் இன்சுலினை சுரக்கச் செய்யும் பீட்டா செல்கள், ஐ.ஆர் 8, ஐ.ஆர் 20 என மாவுச் சத்தை மட்டுமே கொண்டுள்ள வீரிய அரிசி ரகங்களால் அழிந்துக் கொண்டிருக்கிறது. அரிசி பயன்பாடு இருக்கும் தேசங்கள் எல்லாம் சர்க்கரை நோயின் பிறப்பிடமாகவே மாறிப் போய்விட்டன.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். 'இந்திய குடிமகனின் ஆரோக்கியத்தைப் பற்றி மோடி உண்மையிலேயே கவலைப்படுகிறாரா?' என்ற கேள்விதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். கடந்த மார்ச் 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதைப் பற்றி குறைந்தபட்ச விவாதம்கூட நடக்கவில்லை. அந்த வழக்கின் சாராம்சம் இதுதான்.

'நம் நாட்டில் விற்பனையாகும் மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்த எத்தகைய ஒழுங்கு விதிமுறைகள் நடைமுறையில் இருக்க வேண்டும். அதில் குறைகள் இருக்கும்போது, யார் பொறுப்பு என முடிவு செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும்' என்பதுதான். இந்த வழக்கைத் தொடர்ந்த தினேஷ் தாகூர் என்பவர், ரான்பாக்ஸி நிறுவனத்தில் வேலை பார்த்தவர். ரான்பாக்ஸியின் மருந்து உற்பத்தி மோசடிகளை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தியதன் மூலம், அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் 500 மில்லியன் டாலர் அபராதத்தை ரான்பாக்ஸி மீது விதிக்கவும் காரணமாக இருந்தவர்.

ஒழுங்கு விதிமுறைகள் அதிகம் இருக்கும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மருந்துகளில்கூட பிரச்னை இருக்கும்போது, உள்நாட்டு மருந்தின் தரத்தை உறுதிப்படுத்த தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது ஏன்? என யாரும் கேள்வி கேட்கவில்லை. 'உச்சநீதிமன்றத்தின் அக்கறை இவ்வளவுதானா?' என அரசின் சொலிசிட்டர் ஜெனரல்கள் வரிந்து கட்டிக் கொண்டு வாதம் செய்யவும் வரவில்லை. ஏனென்றால், தினேஷ் தாகூரின் சத்தம் அவர்களுக்கு அவசியமற்றது.

இதுபற்றி நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர் கல்பாக்கம் புகழேந்தி, " மாத பட்ஜெட்டில் 70 சதவீதத்தை மருந்துக்கே செலவிடும் சாமானிய மனிதர்கள் நமது நாட்டில் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் மருந்தின் தரம் குறைவாக இருந்தால், அது எப்படி வேலை செய்யும்? கிருமிக் கொல்லி மருந்துகளின் தரம் குறைவாக இருந்தால், கிருமிகள் மருந்தின் எதிர்ப்புத் தன்மையை எளிதில் பெற்றுவிடும். 'நோய் சரியாகாமல் மீண்டும் மீண்டும் மருந்து கம்பெனிகளுக்கே படையெடுக்க வேண்டும்' என்றுதான் மருந்து கம்பெனிகள் விரும்புகின்றன. இதே தினேஷ் தாகூர், சுகாதாரத் துறை அமைச்சரை 2014-ல் சந்தித்து பேசியபோது, 'அவர் எந்த அக்கறையும் காட்டவில்லை' என்கிறார். சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்துப்பேசியபோது, 'இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாது. பொதுநல வழக்குதான் ஒரே வழி' எனக் கூறியுள்ளனர். மருந்தின் தரத்தில் அரசு மாற்றம் கொண்டு வர நினைத்தாலும், மருந்து நிறுவனங்கள் தங்களது ஆக்டோபஸ் கரத்தால் அதைத் தடுத்து நிறுத்தும் வல்லமையைப் பெற்றுள்ளன.

அரசின் அக்கறையைப் பார்க்கும்போது, இயல்பாகவே சில கேள்விகள் எழுகின்றன. அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் வரையில் தவறான மருத்துவ முடிவுகளால் இறக்கிறார்கள் என அந்நாட்டு மருத்துவக் குறிப்பு சொல்கிறது. அதைவிட, மூன்று மடங்கு மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் தினமும் எவ்வளவு இறப்புகள் தவறான மருந்துகளாலும், மருத்துவ முறைகளாலும் ஏற்படுகின்றன? 2013-ல் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வு, இதுவரையில் 52 லட்சம் பேர் தவறான மருத்துவ முடிவுகளால் உயிரிழந்துள்ளனர் என்கிறது. பலருக்கு உடல்ரீதியான பாதிப்பும் ஏற்பட்டுள்ளது எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 2014-ம் ஆண்டு தேசிய மருத்துவ இதழ் வெளியிட்ட தலையங்கத்தில், 'நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் எந்த கொள்கை முடிவுகளையும் எடுப்பதில்லை' என எச்சரிக்கிறது. இதற்கு எந்தப் பதிலும் வராதது ஏன்? 1960-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரையில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மொத்த ஆய்வுகள் வெறும் 13 தான். இந்தியக் குடிமகனின் ஆரோக்கியத்தில் அரசின் அக்கறை இவ்வளவுதானா? வெளிநாட்டு மருந்து கம்பெனிகள் இந்திய மருந்தின் மீது சந்தேகத்தைக் கிளப்பினால், அதற்கு தேர்டு பார்ட்டி ஆடிட்டிங் வைப்பதற்குக்கூட மத்திய அரசு சம்மதிக்கிறது. ஆனால், இந்திய மருந்துகளின் தரம் குறித்து எந்த ஆடிட்டிங்கும் வைப்பதில்லை" என்கிறார் வேதனையோடு.

இதே தினேஷ் தாகூர்,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் 125 முறைக்கும் மேல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் முக்கியமான தகவல்களை வாங்கியுள்ளார். அவை அத்தனையும் இந்திய மருந்தின் தரம் குறித்து அதிர வைக்கும் தகவல்கள்தான். மத்திய தணிக்கை மற்றும் கணக்காய்வு குழு அறிக்கையில், தரம் குறைந்த மருந்துகளின் அளவு அதிகரித்து வருவதைக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராணுவ மருத்தவமனைகளில்கூட 32 சதவீதம் அளவுக்கு தரம் குறைந்த மருந்து இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகிறது.

நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பெறப்பட்ட ஒரு ஆர்.டி.ஐ தகவலில், '2012-ல் ஐரோப்பிய மருந்து நிறுவனங்கள், தங்களது நாட்டில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் விற்றதையும்' அம்பலப்படுத்துகிறது. இதற்காக, 'அனுமதி கொடுத்தவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்போம்' என எழுத்து வடிவில் நிலைக்குழு கொடுத்தும் அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. 'மருந்துகளின் தரம் குறித்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்' என்பதற்கு, 'நம்மிடம் அதற்குரிய வசதிகள் இல்லை' என்கிறது அரசு. ஆனால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மருந்துகளுக்கு மட்டும் எல்லாவிதமான வசதிகளையும் அரசு செய்து தருகிறது. தரமற்ற மருந்துகளின் புழக்கத்தை மருந்து மேற்பார்வையாளர்கள் கண்டறிந்தும், நடைமுறையில் இருக்கும் சட்டங்களை வைத்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க முடியாத சூழலே நிலவுகிறது.

உதாரணமாக உத்தரகாண்ட், ஹரியானா மாநிலங்களில் உள்ள மருந்து நிறுவனங்கள், தரமற்ற மருந்துகளைத் தயாரித்தால் அந்த மாநில அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கும் ஏகப்பட்ட நடைமுறைகள் உள்ளன. தவறு செய்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்பது நடைமுறையில் இருந்தும்,  செயல்படுத்தப்படாமலேயே உள்ளது. மோசடிகள் பல்லாயிரம் கோடிகளில் புரளும்போது, அபராதம் சில லட்சங்களில் மட்டுமே விதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு 33 சதவீத மருந்துகளும் இங்கிலாந்திற்கு 25 சதவீத மருந்துகளும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகிறது. ரான்பாக்ஸியின் மோசடிக்குப் பிறகு, இந்திய நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை அந்நாடுகள் அதிகப்படுத்திவிட்டன. ஆனால், இந்திய மக்கள் வாங்கும் மருந்துகளை, அரசு கண்காணிக்கப் போவதில்லை. அது அவர்களுக்கு தேவையற்றது.

நம்புங்கள்...உங்கள் உடல்நலனில் மோடி ரொம்பவே அக்கறையோடு இருக்கிறார்...!

(இன்று உலக சுகாதார தினம்)

-ஆ.விஜயானந்த்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close