Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேரளா கோவில் திருவிழாவில் தீ விபத்து: 84 பேர் பலி!

திருவனந்தபுரம்: கேரளாவில் கோவில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம், கொல்லம் அருகேயுள்ள பராவூர் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அதன்படி நேற்று (9-ம் தேதி) அந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரவில் பட்டாசு வெடிக்கப்பட்டது. இதைப் பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். இன்று (10-ம் தேதி) வெடிப்பதற்காக பாதி பட்டாசுகளை எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ள பட்டாசுகளை வெடித்திருக்கின்றனர். அப்போது பட்டாசுகளின் தீப்பொறி, எடுத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீதும் விழுந்திருக்கிறது. இதையடுத்து, அந்த பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்திருக்கின்றன.

இதைத்தொடர்ந்து அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மேலும், கட்டடங்களின் சுவர்களும் இடிந்து விழுந்திருக்கிறது. இந்த தீ விபத்தில் 84 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதி வைத்தனர்.

கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். மேலும், விபத்து நடந்தது குறித்து உரிய விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள அமைச்சர் தகவல்

விபத்து குறித்து கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், ''தீ விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு நிதியுதவி அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பாதிப்படைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்'' என்றார்.

வழக்கு பதிவு

தீ விபத்து நடந்த கொல்லம் கோவில் நிர்வாகத்தினர் மீது கேரள காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல், திருவிழாவில் பட்டாசு வெடிக்க அனுமதித்தோர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், கோயிலுக்கு பட்டாசுகள் விநியோகம் செய்த ஒபப்பந்ததாரர் சுரேந்திரன் வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒப்பந்ததாரர் சுரேந்திரனை தேடி வருகின்றனர்.

இரங்கல்

கொல்லம் கோவிலில் நடந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ