Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பலத்த பாதுகாப்புக்கு இடையே அசாம், மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

கவுகாத்தி: அசாம், மேற்குவங்க மாநிலத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு இடையே, காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அசாம் மாநில சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மொத்தமுள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளில், 65 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு,  கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. இதில், 82.21 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில், 2–வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 61 தொகுதிகளுக்கு இன்று காலை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல், மேற்கு வங்க மாநிலத்திலும் 31 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

மேற்கு மற்றும் மத்திய அசாமை சேர்ந்த இந்த தொகுதிகளில்,  ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க.–அசாம் கணபரிஷத், அனைத்து இந்திய ஐக்கிய மக்கள் முன்னணி இடையே பெரும்பாலும் மும்முனை போட்டி நிலவுகிறது. அசாம் மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் 61 தொகுதிகளில், காங்கிரஸ் 57 இடங்களிலும், பா.ஜ.க. 35 இடங்களிலும், அசாம் கணபரிஷத் கட்சி 19 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இன்றைய வாக்குப்பதிவில் 48 பெண்கள், 214 சுயேச்சைகள் உள்பட 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் அரசியல் எதிர்காலத்தை 50 லட்சத்து 44 ஆயிரத்து 51 பெண்கள் உள்பட 1 கோடியே 4 லட்சத்து 35 ஆயிரத்து 271 வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். மாநில முன்னாள் முதல்வரும், அசாம் கணபரிஷத் தலைவருமான பிரபுல்ல மகந்தா, பா.ஜ.க. தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அனைத்து இந்திய ஐக்கிய மக்கள் முன்னணி தலைவர் அத்ருத்தீன் அஜ்மல் உள்ளிட்டோர் இன்றைய வேட்பாளர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 12 ஆயிரத்து 699 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் கோல்பரா மாவட்டத்தில் சமீபத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. மேலும் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த சில பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதைப்போல 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காளத்தில் 6 கட்டங்களாக (7 நாட்கள்) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு முதல் (ஏ) கட்ட வாக்குப்பதிவு கடந்த 4–ம் தேதி நடந்த நிலையில், 31 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றைய தேர்தலில் 21 பெண்கள் உள்பட 163 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மேற்கு மிட்னாப்பூர், பங்குரா, பத்வான் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 70 லட்சம் வேட்பாளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுகின்றனர். இங்கும் பதற்றம் மிகுந்த வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ