Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொல்லம் கோயில் கோர வெடிவிபத்தில் 5 பேர் கைது!

திருவனந்தபுரம்: கொல்லம் கோயிலில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கையின் போது ஏற்பட்ட கோர வெடிவிபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த வழக்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்று கேரள போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூரில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புற்றிங்கல் தேவி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில்,  கடந்த 7 நாள்களாக திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் கடைசி நாளான கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, பிரம்மாண்ட வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியைக் காண்பதற்காக, கோயில் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் வாண வேடிக்கையில் வெடிக்கப்பட்ட சில பட்டாசுகள், மற்றோர் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது விழுந்து வெடித்தன. இதைத் தொடர்ந்து, அந்தப் பட்டாசுகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக வெடிக்க தொடங்கின. இதனால், அந்த பகுதி, நில அதிர்வு ஏற்பட்டது போல் பயங்கரமாகக் குலுங்கியது.

வெடிவிபத்தைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால், வாணவேடிக்கை நிகழ்ச்சியைக் காண வந்திருந்த மக்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள அங்கும் இங்குமாக ஓடி, செய்வது அறியாமல் தவித்தனர். அப்போது, அங்கு நேரிட்ட தீ விபத்தில் சிக்கியும், மண்டப இடிபாடுகளுக்கு இடையே சிக்கியும் 106 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் திருவனந்தபுரம், கொல்லம் நகர அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில், பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த வெடிவிபத்து குறித்து, கேரள போலீசார் கோவில் நிர்வாகிகள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி), மற்றும் 308 (கொலைக்கு உடந்தையாக இருத்தல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், வெடிபொருள் ஒப்பந்தக்கார்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வெடிவிபத்து தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளதாக கேரள மாநில டி.ஜி.பி. தெரிவித்து உள்ளார். மேலும், இவ்வழக்கு விசாரணை மாநில குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்