Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசமைப்புச் சட்டத்தைவிட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில், அரசமைப்புச் சட்டத்தைவிட பாரம்பரியம் உயர்ந்ததா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் பெண்களை அனுமதிக்ககோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கோபால கௌடா, குரியன் ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலை ஐயப்பன் கோயில் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதிடும்போதும், ''சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல நூற்றாண்டுகளாகவே பெண்களுக்கு தடை விதிக்கும் வழக்கம் தொடர்கிறது.

அதை மனதில் கொண்டு, இந்த வழக்கு மீது உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். மேலும், சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரி கடவுளாக இருப்பதால் பெண்களை அனுமதிக்க மறுப்பது  பாரம்பரியமாக இருந்து வருகிறது" என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி குரியன் ஜோசப், ''திருநங்கைகள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்களா?" என கேள்வி எழுப்பினார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள், ''சபரிமலை ஐயப்பன் கோயில் பொதுச் சொத்தாகும். அங்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அப்படியிருக்கும்போது, சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகப் பகுதிக்கு வந்து, கடவுளை பெண்கள் வழிபடுவதற்கு தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு என்ன அதிகாரம் உள்ளது? பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்ற காரணத்தால் இந்த பழக்க வழக்கங்கள், அரசியல் சாசனத்திற்கு உட்படாமல் இருக்க முடியுமா?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதன் மூலம், பாலின சமத்துவம் சார்ந்த நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடவுளை வழிபடுவதற்கு ஆண்களுக்கு மட்டும்தான் உரிமை உள்ளதா? பெண்களுக்கு கடவுளை வழிபடும் தகுதி இல்லையா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 1,500 ஆண்டுகளில் பெண்கள் யாரும் வழிபடவில்லை என்று உறுதியாக உங்களால் தெரிவிக்க முடியுமா?

இந்தியாவில் தந்தையை விட தாயே உயர்வானவராக கருதப்படுகிறார். அவரையே நாம் முதன்மையானவராக வணங்குகிறோம். அத்தகைய பெண்களுக்கு, கோயில்களில் தடை விதிக்கக் கூடாது. அரசமைப்புச் சட்டத்தைவிட பாரம்பரியம் உயர்ந்ததா? இந்த விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும். வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி உச்ச நீதிமன்றம் முடிவெடுக்காது.

உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள் குறித்து 6 வாரங்களுக்குள் சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்றதுடன், இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

எடிட்டர் சாய்ஸ்