Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமானத்துக்கு ஏற்ப செலவிடுங்கள்... மாநில அரசுகளுக்கு அருண் ஜெட்லி அறிவுரை!

புதுடெல்லி: மாநில அரசுகள், தங்கள் வருமானத்துக்கு ஏற்ப செலவிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவுறுத்தி உள்ளார்.

டெல்லியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மாநில நிதித் துறைச் செயலாளர்கள் பங்கேற்ற 2-வது மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசும்போது, ''மத்திய அரசின் நிதியை எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்? எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து உறுதிப்படுத்திக் கொள்வது நமது முக்கியமான பொறுப்பாகும்.

மத்திய அரசின் நிதிகளை வளர்ச்சி சாராத திட்டங்களுக்கு செலவிடும்போக்கு, குறுகிய கால அளவில் கவரக் கூடியதாக இருக்கும். எனினும், அவை நீண்ட கால அளவில் நல்ல விளைவுகளை அளிக்காது. 14-வது நிதிக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய அரசின் வரிகளில் மாநிலங்களின் பங்கு கணிசமாக உயர்ந்துள்ளது.

நிதிக் குழுவின் அறிக்கையின்படி, மத்திய அரசு வரிகளில் மாநில அரசுகளின் பங்கு 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 13-வது நிதிக் குழுவின்போது மாநிலங்களுக்கு கிடைத்த பங்கு என்ன என்பதையும், தற்போது கிடைத்துவரும் பங்கு என்ன என்பதையும் 14-வது நிதிக் குழு அறிக்கை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

எந்தெந்தத் திட்டங்களுக்கு எவ்வளவு செலவிட வேண்டும் என்ற மத்திய அரசின் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். இது, இந்தியாவின் நம்பகத்தன்மை மீதும், வட்டி விதிகங்களின் மீதும் உடனடி விளைவுகளை ஏற்படுத்தும். உலக அளவில் வளர்ச்சி என்பது கடினமான ஒன்று என்கிறபோதிலும், இந்தியா நியாயமான வளர்ச்சியை பெற்றுள்ளது.

சமூகத் துறை, உள்கட்டமைப்பை உருவாக்குதல், ஊரகப் பகுதிகள் ஆகியவற்றில் அதிக நிதியை செலவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகளை நேரடியாகப் பெறுவதற்கு ஆதார் அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும். சில மாநிலங்களுக்கு அவர்களின் திட்டங்களுக்குக்கேற்ப கூடுதல் நிதி ஆதாரம் அளிக்கப்படுகிறது. அவை மாநிலங்களின் வருமானத்துக்கு ஏற்ப செலவிடப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ