Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தூய்மை இந்தியா' திட்டம் செயலாக்கம் இல்லாத திட்டம்: ராகுல் காந்தி கடும் தாக்கு!

மும்பை: 'தூய்மை இந்தியா' திட்டம் செயலாக்கம் இல்லாத திட்டம் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

மும்பை மாநகராட்சி துப்பரவு ஊழியர்கள், நகரில் உள்ள குப்பைகளை சேகரித்து வந்து புறநகர் பகுதியில் 326 ஏக்கர் பரப்பளவில் உள்ள தேவ்னார் மைதானத்தில் கொட்டுவது வழக்கம். இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இதனை மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுமார் 1.2 கோடி டன் குப்பைகள் நிறைந்த அந்த மைதானத்தை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தேவ்னார் மைதானத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் தீவிபத்துகள் நடந்துள்ளன. இதனால் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த புகை மூட்டம் காணப்பட்டது. அதிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியேறியதால், 6 மாதக் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இந்த குப்பை மேட்டால் காற்று மாசடைவதோடு, சுற்றியுள்ள மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மைதானம் மக்களின் ஆரோக்கியத்தை கெடுத்து வருகிறது.

இங்கு பா.ஜ.க., சிவசேனை கூட்டணி ஆட்சி உள்ளது. மும்பை மாநகராட்சியிலும் அந்த கூட்டணி அங்கம் வகிக்கின்றனர். தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வரும் வேளையில் துரதிருஷ்டவசமாக, இந்த மைதானத்தை சுத்தப்படுத்த வியூகம் ஏதும் வகுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த மைதானத்தை சுத்தப்படுத்துவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்க, தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடியோ அல்லது முதல்வரோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூய்மை குறித்து பேசுவது வேறு; அதைச் செயல்படுத்துவது வேறு என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும். நாட்டை சுத்தமாக வைத்திருக்கவும், இதுபோன்ற அச்சுறுத்தல்களில் இருந்து பொதுமக்களை விடுவிக்கவும் எந்தவொரு இலக்கும், யுக்தியும் வகுக்கப்படவில்லை. மும்பை இந்தியாவின் சின்னம்; வளர்ச்சியின் சின்னமாகும். இங்கு இதுபோன்ற குப்பை மேடு மைதானம் இருக்கக் கூடாது. எனவே அந்த மைதானத்தை மூட வேண்டும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ