Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜல்லிக்கட்டுக்கான விதிகளில் மாற்றம் செய்ய அனுமதிக்க கூடாது: விலங்குகள் நல வாரியம்!

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு விதிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசை அனுமதிக்க கூடாது என்று விலங்குகள் நல வாரிய உறுப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளித்து கடந்த ஜனவரி மாதம் 7-ந்தேதி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் கடந்த ஜனவரி 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மாதம் 28-ம் தேதி இந்திய விலங்குகள் நல வாரியத்துக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பியது. அதில், மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு விலங்குகள் நல வாரியத்துக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும், விலங்குகள் நல வாரியத்துக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் விளக்கம் கோரப்பட்டும் இருந்தது.

மத்திய அரசின் இந்த நோட்டீசுக்கு ஏப்ரல் 8-ம் தேதியன்று விலங்குகள் நல வாரியம் பதில் அளித்தது. அதில், மிருக வதை தடை சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய விலங்கு நல வாரியம் காளைபோன்ற மிருகங்கள் மீதான கொடுமைக்கு எதிராக வழக்கு தொடுத்தது என்றும் அரசாங்கத்துக்கு எதிராக எங்கள் நடவடிக்கை அமையவில்லை எனவும் பதில் அளித்தது.

இந்நிலையில், இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினர் என்.ஜெயசிம்மா என்பவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ''உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய அரசு அனுப்பிய விளக்கம் கோரும் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு தொடர்பான மனு விசாரணை முடியும் வரை விலங்குகள்நல வாரிய உறுப்பினர்களில் மாற்றம் எதுவும் செய்யக் கூடாது. மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட விதிகளில் மாற்றங்கள் எதுவும் செய்ய மத்திய அரசை அனுமதிக்க கூடாது என்றும் இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close