Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலாமையும், கமலையும் அவமதித்தவர்கள் இன்னும் மாறவே இல்லை! - தொடரும் வேதனைகள்

வெளிநாடுகளுக்கு செல்லும் நம் நாட்டு தலைவர்கள்,  அங்குள்ள விமான நிலையங்களில் சோதனை என்ற பெயரில் அவமதிக்கப்படுவது கடந்த காலங்களில் பலமுறை அரங்கேறி உள்ளது. அப்துல் கலாம் அமெரிக்கா சென்றபோது அவரது ஆடைகளை களைந்து சோதனையிட்டு,  அவமரியாதை செய்தனர் அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பின்னரும் சில நாடுகள்,  இந்திய தலைவர்களை அவமதிக்கும் செயலை  இன்னமும் தொடரத்தான் செய்கின்றன.

மேலங்கி கழற்றப்பட்ட அப்துல் கலாம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, சோதனை என்கிற பெயரில் அவரது செருப்புகள், மேலங்கி உள்ளிட்டவற்றை கழற்றச் சொல்லி நியூயார்க் விமான நிலைய அதிகாரிகள் அவமரியாதை செய்தனர்.

வெடி பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதற்காக இந்த சோதனையை நடத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். இது இந்தியர்களிடையே அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து,   அமெரிக்க அரசும்,  சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்தன.

இந்த சம்பவத்திற்கு முன்பே,  கடந்த 2009-ம் ஆண்டும் இதேபோல அமெரிக்க அதிகாரிகள் அவரை சோதனை என்ற பெயரில் அவமதித்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற முறையில் அப்துல் கலாமுக்கு சோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் அமெரிக்கா,  இந்த அவமரியாதையை செய்தது.

கடந்த வாரம் தமிழக பத்திரிக்கையாளர் ஒருவர், கோலாலம்பூர் சென்றிருந்தார். அங்கு விமான நிலையத்தில் அவர் கண்ட காட்சியை நம்மிடம் விவரித்தார்.

“கடந்த 1 ம் தேதி நான் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்றேன். சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த பின்னர், அங்கு குடியுரிமை சோதனை (இமிகிரேஷன்) முடிந்து உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். அப்போது அங்குள்ள உடமைகளை பரிசோதிக்கும் தானியங்கி சோதனைக் கருவி மூலம் எங்கள் உடை பரிசோதிக்கப்பட்டன. சோதனையின்போதே அங்கிருந்த அதிகாரி எங்களிடம் கொஞ்சம் கடுமை காட்டினார். அப்போது என்னுடன் வந்த நண்பர் தன் பெட்டியை மறந்துவிட்டார். திரும்ப அவர் வருவதற்கு அரைமணிநேரம் ஆனது. அப்போதுதான்  தானியங்கி உடைமை பரிசோதனை மையத்தில் ஒரு விஷயத்தை கவனித்தேன். 

வெள்ளைத் தோலுடைய சுற்றுலா பயணிகள், அதாவது வெள்ளைக்காரர்கள் தங்கள் உடமைகளை கொண்டுவரும்போது எந்தவித சோதனையுமின்றி தங்கு தடையில்லாமல் எடுத்துச் சென்றார்கள். அதாவது தங்களை கடக்கும் பயணிகள் இந்தியர்கள் அல்லாதவர்களாக இருந்தால் அவர்களை சைகையால் போகச்சொல்வதோ அல்லது  அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் சோதனை அதிகாரிகள் அரட்டையடித்துக் கொண்டிருப்பதோ நடந்தது. அதே சமயம் உடமைகளை எடுத்து வருபவர் இந்தியராக - அதுவும் தமிழர்களாக இருந்தால், அதுவரை பேசிக்கொண்டிருக்கும் அதிகாரிகள் சட்டென உஷாராகி அவர்களை இனம் கண்டு, தடுத்து சோதனைக்குள்ளாக்கினர்.

இந்த வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது. அவர்களின் சோதனை பட்டவர்த்தனமாக,  ஏதோ சந்தேகத்திற்குரிய நபரை விசாரிப்பதுபோல இருந்தது. இந்தியர்களை குறிப்பாக, தமிழர்கள் மேல் வெளிநாட்டவர்க்கு ஏதோ இனம் புரியாத ஒரு வெறுப்பு வளர்ந்துவிட்டிருப்பதை இது காட்டுகிறது.

இத்தனைக்கும், மலேசியாவில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. தமிழர்கள் ஆட்சி நிர்வாகத்தில் அமைச்சர்களாக, பல்வேறு துறைகளில் உயர் பெறுப்புக்களில் இருக்கிறார்கள். இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் மலேசியா முக்கியமானது.

அண்மையில் கூட பிரதமர் மோடி,  மலேசியா சென்று வந்தார். அதனால் என்ன பயன்? இந்தியர்கள் இழிவுபடுத்தப்படுவதை யார் தடுத்து நிறுத்தினார்கள்? நான் இதற்கு முன்பு சென்ற பாரீஸ் சர்வதேச விமான நிலையம், துபாய், அபுதாபி, மஸ்கட், வெனிஸ் (இத்தாலி) பார்ஸிலோனா (ஸ்பெயின்) ஆகிய நாடுகளிலும் இதுதான் நிலை. அருகில் உள்ள சிங்கப்பூரிலும் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் இத்தகைய அணுகுமுறை கிடையாது. அனைவரும் ஒரே மாதிரி நடத்தப்படுகிறார்கள்.

உலகமெங்குமே இந்த நிற வேறுபாடு இருப்பதை மாற்ற யாருமே முயற்சிக்கவில்லை. ஏனென்றால், மக்களுக்கான தலைவர்களை கொண்ட தலைமை, விரல் விட்டு எண்ணக் கூடிய நாடுகளில்தான் இருக்கிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள்தான் இத்தகைய அவமரியாதைக்கு அதிகம் உள்ளாவதாக புகார் உள்ளது. வெளிநாட்டு விமான நிலைய அதிகாரிகளின் தமிழர்களின் மீதான இந்த பார்வையை மாற்றும் முயற்சியில் மத்திய அரசு முயற்சிக்கவேண்டும்” என்றார் விரக்தியான குரலில்.

சட்டையை ஏன் மடிச்சி விட்டிருக்கீங்க...

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசுக்கு இப்படி அடிக்கடி நடந்ததுண்டு. அவரது உடை அணியும் பாணி பலமுறை அவரை விமானநிலையத்தில் தடுக்க காரணமாகியிருந்திருக்கிறது. இத்தனைக்கும் அவர் இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக இருந்தவர்.

இந்தியக் கலைஞர்கள் பலர்,  பலதடவைகள் இப்படி பெயர்க் குழப்பத்தில் விமானநிலையத்தில் அலைக்கழிக்கப்பட்டதுண்டு. நடிகர் கமலஹாசன் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருமுறை ஹாசன் என்ற பெயருக்கு விளக்கம் கேட்டு தடுத்து நிறுத்தப்பட்டார் அங்குள்ள குடியுரிமை அதிகாரிகளால். 

பாதுகாப்பு சோதனை என்ற பெயரால்,  பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர் ஷாரூக்கானும் ஒருமுறை இப்படி அமெரிக்க விமான நிலையத்தில் 2 மணிநேரம் காக்க வைக்கப்பட்டார். அவர் முஸ்லீமா இந்துவா என்பதில் அமெரிக்காவுக்கு பிரச்னையில்லை. அவர் ஒரு இந்தியர் என்பதே அவர்களுக்குள்ள பிரச்னை.

இந்திய கலைஞர்கள் பலரும் இப்படி வெளிநாட்டு விமான நிலையங்களில் அவமதிக்கப்படுவதை கண்டிக்கும் விதமாக நடிகர் கமலஹாசன், kamal hassan என்பதை Qamal hassan என தனது பெயரை அரபி உச்சரிப்பில் மாற்றப் போவதாக அறிவித்து, ஒருமுறை பரபரப்பை ஏற்டுத்தினார்.

பொதுவாகவே வடமாநிலங்களில்,  அக்காலத்திலிருந்தே தமிழர்களை மதராஸி என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கும் வழக்கம் இருந்தது. இது பின்னாளில் நம்மவர்கள் அரசியலிலும்,  சினிமாவிலும் கொடிநாட்டிய பின் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, தமிழர்களுக்கு மரியாதை உண்டானது. இனம் புரியாத இந்த வெறுப்பு இன்று இந்தியர்கள் மீதும், தமிழர்கள் மீதும் வெளிநாடுகளில் வளர்ந்திருப்பது ஆபத்தான அறிகுறியாக தெரிகிறது.

இந்த விவகாரத்தில் வெளிநாட்டினருக்கு தலைவர்கள், பொதுமக்கள் என்ற பேதமில்லை. யார் ஒருவர் இந்தியராக இருந்து அவர்களை அவமதித்தாலும், அதில் அவர்களுக்கு ஒரு சுகம்தான்போல.

நாடுகளுக்கிடையேயான நல்லுறவை வளர்ப்பதாக கூறி,  மாதம்தோறும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி,  மற்ற நாடுகளின் மீதான அன்பை தம் பேச்சாலும் செய்கைகளாலும் வெளிப்படுத்திவருகிறார். ஒருகை ஓசையாக இந்த ஆரோக்கியம் இருப்பது,  எந்த பயனும் தராது. ஒருவகையில் மோடியும் அமெரிக்காவின் இந்த அதிகார குரலால் பாதிக்கப்பட்டவர்தான். குஜராத்தின் முதல்வராக இருந்த அவருக்கு ஒருமுறை விசா வழங்குவதில் கறார் காட்டியது உலமறிந்த சேதி.

இந்தியர்கள் மீதான வெறுப்பை வெளிநாட்டு அதிகாரிகளின் மனதிலிருந்து அகற்றும் முயற்சியை இனி வருங்காலங்களில் மோடி மேற்கொள்ளவேண்டும். ஏனென்றால் இந்தியா என்றால் மோடி மட்டுமே அல்ல!

செய்வீர்களா மோடி... நீங்கள் செய்வீர்களா...?

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close