Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொழிலாளர்கள் தொடர் போராட்டம்; வன்முறை: புதிய பிஎஃப் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

புதுடெல்லி: தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தையடுத்து, புதிய பி.எஃப் திட்டத்தை தற்காலிகமாக 3 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) திட்டத்தில் மத்திய அரசு சில மாற்றங்களை செய்து புதிய திட்டத்தை அறிவித்தது. அதன்படி, தொழிலாளர் ஒருவர் 58 வயது நிரம்பிய பின்னர்தான் பி.எஃப் பணத்தில் இருந்து முதலாளியின் பங்கு தொகையை பெற முடியும். 58 வயதுக்கு முன்னர் வேலையில் இருந்து தொழிலாளர் நின்று விட்டால், அவர்களது சம்பளத்தில் பிடிக்கப்பட்ட தொகையை மட்டுமே பெற முடியும்.

இந்த திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அப்போது மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஏப்ரல் 30-ம் தேதி வரை புதிய பி.எஃப் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது வரும் மே மாதம் 1-ம் தேதியிலிருந்து புதிய பி.எஃப் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதேபோல், பெங்களூருவில் உள்ள ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவன தொழிலாளர்கள்,  2-வது நாளாக இன்று (19-ம் தேதி) ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில், தெப்பக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்கியதாக தெரிகிறது.

இதையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அருகிலிருந்த தெப்பக்குடி காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள், தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இந்த போராட்டத்தின்போது, 3 போலீஸ் வாகனங்கள் மற்றும் 3 அரசு பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக, புதிய பி.எஃப் திட்டத்தை 3 மாதங்களுக்கு அதாவது ஜூலை 31-ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ