Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதமர் முன்னிலையில் கண்ணீர் விட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி! (வீடியோ)

பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்

டெல்லியில் நேற்று நடந்த முதல் அமைச்சர்கள் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில்,  சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் உரையாற்றினார். அப்போது,  நீதிமன்றங்களில் தேங்கியுள்ள கோடிக்கணக்கான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர போதுமான நீதிபதிகளை அரசுகள் நியமிக்காததை கண்ணீருடன் எடுத்துரைத்தார்.

பிரதமர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மனமுடைந்த நிலையில், குரல் தழுதழுக்க அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

10 லட்சம் பேருக்கு 10 நீதிபதிகள் என்றிருந்த விகிதத்தை,  10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என மாற்றியமைக்க 1987–ம் ஆண்டில் சட்டக்குழு பரிந்துரை செய்தது. ஆனால் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் விஷயத்தில் அரசுகள் செயலற்ற தன்மையிலேயே இருக்கின்றன. இன்றைய நிலையில் 10 லட்சம் பேருக்கு வெறும் 15 நீதிபதிகள் என்ற சதவீதமே இருக்கிறது. இது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளை விட மிகவும் குறைவு. 1987–லேயே நீதிபதிகளின் தேவை 40 ஆயிரமாக இருந்தது. அதற்குப்பிறகு 25 கோடிக்கு மேல் மக்கள் தொகையும் அதிகரித்து விட்டது. ஆனால் இன்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 21 ஆயிரமாகவே உள்ளது.

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக பல மாநாடுகளில் பேசியாகி விட்டது. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எதுவும் நகரவில்லை.

நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இதற்கு மாநில அரசுகளே பொறுப்பு என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என மாநில அரசுகள் கூறுகின்றன. இந்த நீயா? நானா? போட்டி எங்கு செல்கிறது? கோர்ட்டுகளில் 38 லட்சம் வழக்குகள் இன்னும் தேங்கி கிடக்கின்றன.

இது வெறும் வழக்குகளோ அல்லது மக்கள் சிறைகளில் இருப்பது தொடர்பானதோ அல்ல. மாறாக நாட்டின் வளர்ச்சியிலும் தொடர்புடையது. எனவே நீதிபதிகளின் எண்ணிக்கையை 40 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் பேசினார்.

அவர் உரையாற்றும் போது பலமுறை உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ