Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பகத்சிங் தீவிரவாதியாக சித்தரிப்பு: சர்ச்சையில் டெல்லி பல்கலைக்கழகம்!

 

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் உள்ள ஒரு புத்தகத்தில் பகத்சிங், தீவிரவாதியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தேசிய புத்தக அறக்கட்டளை தலைவராக இருந்த பிபின் சந்திரா மற்றும் மிரிதுளா முகர்ஜி ஆகியோர் எழுதிய, ‘சுதந்திரத்துக்கான இந்தியாவின் போராட்டம்’ என்ற புத்தகம் டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.

இந்த புத்தகத்தில் பகத்சிங் ஒரு ‘புரட்சிகர தீவிரவாதி’ என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல், சிட்டகாங்க் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்றும், சாண்டர்ஸ் படுகொலை தீவிரவாத செயல் என்றும் குறிப்பிட்டுள்ளதாக  தெரிகிறது. இது தொடர்பாக நேற்று கடும் சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து மக்களவையில் பேசிய பாஜக எம்பி அனுராக் தாக்கூர், " டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் பிபின் சந்திரா மற்றும் மிருதுளா முகர்ஜி ஆகியோர் எழுதியுள்ள ‘சுதந்திரத்துக்கான இந்தியாவின் போராட்டம்’ என்ற புத்தகத்தில், பகத்சிங்கை புரட்சிகர தீவிரவாதி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரை மாபெரும் தலைவராகவும் அந்த புத்தகம் சித்தரிக்கிறது. மக்களவையில் 44 சீட்டுகளை மட்டுமே பெற முடிந்த ஒரு கட்சியின் தலைவரை இவ்வாறு குறிப்பிடுவது நகைப்புக்குரியது" என்றார். அவரது கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்திற்கு இன்று கடிதம் எழுதியுள்ளதாகவும், அதில், சுதந்திர போராட்ட வீரர்களை குறிப்பிடும் போது, தீவிரவாதி என்ற வார்த்தையை தவிர்க்க வேண்டும் என்றும், இது தேசிய உணர்வுகளை காயப்படுத்தும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், தற்போது உலகத்தில் தீவிரவாதி என்றால், வேறு அர்த்தம் கூறப்படுவதாகவும், எனவே சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி மேற்கோள் காட்டப்படும் பொழுது மிகவும் கவனத்துடன் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ