Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மே 1, ஜூலை 24ல் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த உச்ச நீதின்றம் உத்தரவு!

புதுடெல்லி: மே 1-ம் தேதி முதல் கட்டமாகவும், ஜூலை 24 இரண்டாம் கட்டமாகவும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசுக்கு, உச்சநீதின்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் கடந்த 2013 ம் ஆண்டு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு முன்னதாக பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தது.

மேலும் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தவும் உத்தரவிட்டது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள்,கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் மத்தியில் இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன.

இந்நிலையில், இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி பொது மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று (புதன்) விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்வைக் கட்டாயம் நடத்த வேண்டும் என மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு  உத்தரவிட்டது. மேலும், பொது நுழைவுத் தேர்வுக்கான புதிய அட்டவணை இன்று (வியாழன்) முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நுழைவுத்தேர்வுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. 2007ம் ஆண்டில் இருந்தே பொது நுழைவுத் தேர்வு கிடையாது என்றும், மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த சிறப்பு சட்டம் உள்ளது என்றும் தமிழக தரப்பில் வாதிடப்பட்டது. பொது நுழைவுத்தேர்வில் தமிழகத்தை சேர்க்கக்கூடாது என்றும்,  தமிழக வழக்குரைஞர் வலியுறுத்தினார். இருப்பினும், பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கில் 3.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் எனவும், அப்போது, பொது நுழைவுத் தேர்வு அட்டவணையும் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 3.30 மணிக்கு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசுக்கு அனுமதி அளித்ததோடு, மே 1-ம் தேதி முதல் கட்ட தேர்வும், ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்வும் நடத்த வேண்டும் எனவும், ஆகஸ்ட் 17-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த தேர்வுக்கான மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எடிட்டர் சாய்ஸ்