Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு கல்தா: வஞ்சம் தீர்த்தாரா ரங்கசாமி?

 

புதுச்சேரி: மாநிலங்களவை தேர்தலின்போது, தனக்கு எதிராக களமிறங்கிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு, சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்காமல், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கல்தா கொடுத்துள்ளார்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் உள்ள முப்பது தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் தனித்துப் போட்டி என்று அறிவித்து, முதல் கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் (27-ம் தேதி) வெளியிட்டார் ரங்கசாமி.

இன்று (29-ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதால், மீதம் உள்ள ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இன்று (29-ம் தேதி) காலை இரண்டாவது பட்டியலை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

1. காமராஜர் நகர் - தயாளன்
2. ஏம்பலம் - பிரபு (எ) லட்சுமி காந்தன்
3. நெட்டப்பக்கம் - ராஜவேலு
4. காலாப்பட்டு - விசுவநாதன்
5. மணவெளி - சுரேஷ்

6. லாஸ்பேட்டை - நந்தா.சரவணன்
7. ஊசுடு - வைத்தியநாதன்
8. திருபுவனை - கோபிகா
9. நெல்லித்தோப்பு - பாலாஜி

இதில், கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காலாப்பட்டு எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், ஊசுடு எம்.எல்.ஏ கார்த்திகேயன், லாஸ்பேட்டை எம்.எல்.ஏ வைத்தியநாதன் ஆகியோருக்கு கல்தா கொடுத்திருக்கிறார்.

புதுச்சேரி அரசியலில் குழப்பங்களுக்கும், அதிரடிகளுக்கும் எப்போதுமே பஞ்சம் இருந்தது இல்லை. சமீப காலங்களில் இதில் அதிகமாக சிக்சர் அடித்துக் கொண்டிருப்பவர் முதல்வர் ரங்கசாமிதான். காங்கிரஸ் கட்சியில் முதல்வராக இருந்த ரங்கசாமியை, அந்த பதவியில் இருந்து இறக்கியதால், ரங்கசாமி கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சித் துவக்கினார். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வந்து, வேட்பாளராக அறிவித்து 2011 தேர்தலை சந்தித்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த 13 வேட்பாளர்களை வாபஸ் பெறச் சொல்லி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார்.

வெற்றி பெற்று ஆட்சியில் அமைந்தவுடன் அ.தி.மு.க.விற்கு டாட்டா காட்டிவிட்டு, சுயேட்சை எம்.எல்.ஏ.வின் துணையுடன் ஆட்சியைப் பிடித்தார். பின் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி, மாநிலங்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க என தொடர்ந்து ரங்கசாமியின் சதுரங்க ஆட்டம் நடந்தது.

சற்று ஏறக்குறைய, இதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த கண்ணனின் பதவிக் காலம் முடிந்தது. இதனால், முதல்வர் ரங்கசாமி தனது நண்பருக்கு அந்த எம்.பி பதவியை வழங்க முடிவெடுத்தார். இந்த முடிவில்தான் கொதித்தெழுந்தனர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.

”இப்படியான கூட்டணி முடிவுகள் குறித்து எடுக்கும் எந்த முடிவுகளையும் கட்சி நிர்வாகிகளிடமோ, அமைச்சர்களிடமோ கருத்து கேட்மால் சர்வாதிகாரி போன்று செயல்படுகிறார் ரங்கசாமி” என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக அவர் மீது கட்சியினர். முக்கியமாக காலாப்பட்டு எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், ஊசுடு எம்.எல்.ஏ கார்த்திகேயன், லாஸ்பேட்டை எம்.எல்.ஏ வைத்தியநாதன் போன்றோர் தங்களின் எதிர்ப்பை மிகத் தீவிரமாக வெளிப்படுத்தினார்கள். மேலும், இவர்கள் அணி மாறி மாற்றுக் கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்கத் தயாரானார்கள்.

இதனால், இவர்களால் எங்கே தனது ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்று நினைத்த ரங்கசாமி ஒரே இரவில், 'கூட்டணி தர்மத்தை மதிக்காமல் முதுகில் குத்தி விட்டார் ரங்கசாமி' என விமர்சித்த ஜெயலலிதாவிடமே மாநிலங்களவை எம்.பி பதவியைக் கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டார். ரங்கசாமியின் இந்த அதிரடி முடிவு, அரசியல் பார்வையாளர்களையே மிரளச் செய்தது.

அதற்குப் பிறகு இந்த மூன்று எம்.எல்.ஏக்களும் அதிருப்தியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், முதல்வர் ரங்கசாமியுடனே வலம் வந்தனர். அதிலும் குறிப்பாக, காலாப்பட்டு எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் ரங்கசாமியின் நிழல்போலவே இருக்கத் தொடங்கினார். ஆனால், இவர்கள் பழையவற்றை எல்லாம் மறந்து விட்டாலும், ரங்கசாமி இவர்கள் செய்ததை மறக்கவில்லை என்பது அவர் வெளியிட்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் மூலமாக தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு சீட் வழங்காமல் கல்தா கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே, இந்த மூன்று பேருக்கும் காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் அழைப்பு விடுத்தது. ஆனால் என்.ஆர்.காங்கிரசில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று நினைத்து செல்லாமல் இருந்துவிட்டனர். தற்போது இவர்கள் மூன்று பேரும் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

“இதை சாதாரண கட்சி விவகாரம் என்று சொல்லிவிட முடியாது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கும், ஒரு தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கும் வாய்ப்பு வழங்கிவிட்டு இவர்களை வஞ்சம் தீர்த்திருக்கிறார் ரங்கசாமி” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

-ஜெ.முருகன்

படங்கள்: அ.குருஸ்தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ