Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் கையில் பணமே இல்லையாம்! -இதுவும் இந்தியாவில்தான்!

திருவனந்தபுரம்: கையிருப்பில் பணமே இல்லை, அசையா சொத்துகள், காரும் கிடையாது என்று தனது வேட்புமனுவில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி,  சொத்து கணக்கை தெரிவித்து உள்ளார்.

கேரள சட்டசபைக்கு,  வருகின்ற 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ்-முஸ்லிம் லீக் தலைமையிலான கூட்டணியும், ஆட்சியை மீண்டும் பிடிக்க இடதுசாரி இயக்கங்களும் முனைப்பு காட்டி வருகின்றன. அதே நேரம், கேரளத்தில் புதிதாக ஆட்சி அமைக்க பா.ஜ.க.வும் முயன்று வருகிறது. இதனால், அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.

கேரள சட்டசபை தேர்தலில், அம்மாநில காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி, திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து பத்துமுறை போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இதை தொடர்ந்து அவர், 11-வது முறையாக அதே தொகுதியில் இந்தமுறையும் போட்டியிடுகிறார். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, உம்மன் சாண்டி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை அளித்துள்ளார்.

அதில், தனது கையிருப்பில் பணமே இல்லை என்று கூறியுள்ளார். அவரிடம் சொந்த காரும் இல்லை. ஆனால், மனைவியிடம் 2010-ம் ஆண்டு மாடல் ‘மாருதி ஸ்விப்ட் டிசையர் கார்’ உள்ளது. தனது பெயரில் ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 40 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.32 லட்சம் மற்றும் பிள்ளைகள் பெயரில் ரூ.13 லட்சம் அசையும் சொத்துகளும் உள்ளன.

மனைவியின் ரொக்க கையிருப்பு ரூ.10,516, தங்க நகைகளின் மதிப்பு ரூ.8,16,960, வங்கியில் ரொக்க இருப்பு ரூ.10,57,524, மனைவி பெயரில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. மேலும், உம்மன் சாண்டி பெயரில் அசையா சொத்துகள் ஏதும் இல்லை. 38 கிராம் தங்க நகைகள் மட்டுமே வைத்துள்ளார்.   அவரது 2014-2015 ஆம் நிதியாண்டுக்கான மொத்த வருமானம் ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்து 230 ஆகும். கடன் எதுவும் இல்லை. வழக்குகளும் நிலுவையில் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ