Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக மீனவர் பிரச்னைக்கு இதுதான் காரணமாம்..! -சொல்கிறார் வி.கே.சிங்

புதுடெல்லி: தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வதற்கும், தமிழக மீனவர் பிரச்னையில் உடன்பாடு ஏற்படாதது ஏன் என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் ஆமைச்சர் வி.கே.சிங் விளக்கம் அளித்தார்.

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகளை பிடித்து வைத்துக் கொண்டு நீண்ட போராத்திற்கு பின் மீனவர்களை மட்டும் விடுவித்துவிட்டு படகுகளை அவர்கள் வசமே வைத்துக் கொள்வதும் தொடர்கதை ஆகி வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரச்னை குறித்து டெல்லி மேல்-சபையில் வெளியுறவு ராஜாங்க அமைச்சர் வி.கே.சிங் பேசும்போது, ''தமிழக மீனவர்கள் இரட்டை மடிவலையைப் போட்டு மீன்களை மொத்தமாக பிடித்து சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ்தான் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி சர்வதேச கடல் எல்லை வரையறையும் பார்வைக்கு தெரியாததால்தான் தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி சென்று விடுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி இலங்கை சிறைகளில் 34 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். 19 படகுகள் இலங்கையின் காவலில் உள்ளன. அங்கு அடைபட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. கடைசியாக கடந்த மாதம் 9-ம் தேதி 99 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இரு நாட்டு மீனவர்கள் இடையே புரிந்துகொள்ளுதல் ஏற்படாத வரையில், இது ஒரு தீவிர பிரச்னையாக இருக்கும். இரு தரப்பு மீனவர்கள் சங்கங்கள் இடையே 3 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் புரிந்துகொள்ளுதல் ஏற்படவில்லை.

எங்கள் பகுதியில் வந்து இரட்டைமடி வலைகளை போட்டு அவ்வளவு மீன்களையும் தமிழக மீனவர்கள் அள்ளிச்சென்று விடுகிறார்கள் என்று இலங்கை மீனவர்கள் சொல்கிறார்கள். அதை நிறுத்திக்கொள்ளாத வரையில், பரஸ்பரம் ஒருவர் கடலில் மற்றவர் மீன்பிடிப்பது தொடர்பாக சரியான உடன்பாடு ஏற்படுத்த முடியாது. இதுதான் இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட தடையாக உள்ளது.

இந்திய மீனவர்களின் (தமிழக மீனவர்களின்) பாதுகாப்புக்கு மத்திய அரசு கூடுதல் முன்னுரிமை அளிக்கிறது. இலங்கை சிறையில் அடைக்கப்படுகிற தமிழக மீனவர்களுடன் தூதரக ரீதியில் தொடர்பு கொள்ளப்படுகிறது. உயர்மட்ட அளவில் தொடர்பு கொண்டு அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ