Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' என் காரையா முந்திப் போற...!?' - மாணவனைச் சுட்டுக்கொன்ற கட்சித் தலைவரின் மகன்!

கயா: பீகார் மாநிலம் கயா பகுதியில்,தனது காரை முந்திச் சென்ற பிளஸ் டூ மாணவனை ஐக்கிய ஜனதா தள பெண் தலைவரின் மகன் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கயா பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்ய சச்தேவா. இவர் அப்பகுதியின் பிரபல தொழிலதிபரின் மகனாவார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு,  தனது நண்பர்களுடன் மாருதி ஸ்விப்ட் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ‘ரேஞ்ச் ரோவர்’ காரை முந்திச் சென்றார்.

அந்த கார் ஐக்கிய ஜனதா தள பிரமுகர்  மனோரமா தேவியின் குடும்பத்துக்குச்  சொந்தமானது. அதில்  தேவியின் மகன் ராக்கி பயணித்துள்ளார். சிறிய கார் தனது காரை முந்திச் செல்கிறதே என்று ஆத்திரம் அடைந்த ராக்கி, தன்னிடமிருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். பின்னர் காரை நிறுத்துமாறு சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆதித்யா காரை நிறுத்தி உள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஆதித்யா மற்றும் அவரது நண்பர்களை காரில் இருந்து வெளியில் இழுத்துத் தள்ளி ராக்கியும் அவருடன் வந்திருந்த பாதுகாவலர்களும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அப்படியும் ஆத்திரம் தாங்காமல் அவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் குண்டுபாய்ந்த நிலையில் ஆதித்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்தக் கொலை குறித்து ஆதித்யாவின் நண்பர் ஒருவர் கூறுகையில், ‘‘நாங்கள் காரை நிறுத்தியதும், அவர்கள் ஓடி வந்து எங்களை பலமாக அடித்து உதைத்தனர். அந்த இடத்தை விட்டுச்  செல்ல முயன்ற போது யாரோ ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஆதித்யா இறந்துவிட்டான். அப்போது டிரைவர் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் துப்பாக்கி இருந்தது’’ என்று தெரிவித்தார்.

இறந்த ஆதித்யா மற்றும் அவனது நண்பர்கள் சமீபத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வை எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக  ராக்கி தலைமறைவாவதற்கு உதவியதாக அவரின் தந்தை பிந்தேஷ்வரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ