Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'என் இறுதி மூச்சு வரை இந்தியாதான்!' -சோனியாவின் நெகிழ்ச்சி

திருவனந்தபுரம்: என் இறுதி மூச்சு உள்ளவரை இந்தியாவில்தான் இருப்பேன். என் அஸ்தியும் இங்குதான் கரைக்கப்படும் என்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் சோனியா காந்தி பேசினார்.

கேரள மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசும்போது, ''காங்கிரசைப் பற்றியும், குறிப்பாக என்னை பற்றியும் பிரதமர் மோடி பேசி வருவதால், சில தனிப்பட்ட விஷயங்களை நான் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நான் இத்தாலியில் பிறந்தவள் என்பது உண்மைதான். இந்திரா காந்தியின் மருமகளாக 1968-ம் ஆண்டு நான் இந்தியாவுக்கு வந்தேன். கடந்த 48 ஆண்டுகளாக என் வாழ்க்கை இந்தியாவில்தான் நடந்து வருகிறது. என் பிறப்பு குறித்து 48 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்டவையும் என்னை வசைபாடி வருகின்றன.

கவுரவமான பெற்றோருக்குத்தான் நான் பிறந்தேன். அதற்காக நான் வெட்கப்படமாட்டேன். இத்தாலியில் என் உறவினர்கள் உள்ளனர். என் 2 சகோதரிகளும், 93 வயதான என் தாயாரும் இத்தாலியில்தான் உள்ளனர். ஆனால், இந்தியாதான் என் தாயகம், இந்தியாதான் என் நாடு. என் இறுதி மூச்சு உள்ளவரை இந்தியாவில்தான் இருப்பேன். இங்குதான் என் அஸ்தி கரைக்கப்படும்.

என் நேர்மைக்கு சவால்விட பிரதமர் மோடி எந்த ஆழத்துக்கும் செல்வார். ஆனால், என் நாட்டுக்காக நான் பாடுபடுவதையும், பற்று வைத்திருப்பதையும் அவரால் தடுக்க முடியாது. எனது உணர்வுகளை பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

பா.ஜனதா அரசின் மதவாத செயல்திட்டத்தை காங்கிரஸ் அம்பலப்படுத்தி வருகிறது. அதனால், காங்கிரசைக் கண்டு பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் பயப்படுகின்றன. அரசியல் எதிரிகளின் நற்பெயரை கெடுப்பதில் மோடி ஈடுபட்டு வருகிறார். அதற்காக கட்டுக்கதைகளையும், பொய்களையும் பரப்பி வருகிறார். அவரது நிர்ப்பந்தங்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். விவசாயிகள், ஆதிவாசிகள் மற்றும் அனைத்து பிரிவினரின் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ