Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கத்தை விட தண்ணீரே முக்கியம்! - ஒரு ஒலிம்பிக் வீரரின் தாகம்!


   

ங்கத்தை விடத் தண்ணீர் மதிப்புமிக்கதாக கருதப்படும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஓர் கிராமத்தில் பிறந்து, தங்கத்தைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறார் ஒரு இளைஞர். மராட்டியத்தின் தலேகான் கிராமத்தில் பிறந்த 24 வயது தத்து பொக்கானல்தான் அது. தண்ணீருக்குப் பயந்தவரான இந்த ராணுவ வீரர், 2016 ரியோ ஒலிம்பிக்கில் படகோட்டும் போட்டியில் இந்தியாவிற்காக கலந்துகொள்ளப் போகிறார்.
   

மஹாராஷ்டிராவில் உள்ள தீராத தண்ணீர்ப் பஞ்சம் தற்போதுதான் வெளியுலகிற்கு தெரிகிறது. அதுவும் இந்த ஐ.பி.எல் இடமாற்ற வழக்கிற்குப் பிறகுதான். ஆனால் பல வருடங்களாக இந்தக் கிராமம் வறட்சியின் பிடியால் வாடி வதங்குகிறது. இப்படிப்பட்ட கிராமத்திற்காக கிணறு வெட்டிக் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு விவசாயியின் மகன்தான் இந்த தத்து பொக்கானல். 2011-ம் ஆண்டு தன் தந்தை இறக்கும் வரை அவருக்கு விவசாயத்தில் உதவி செய்து கொண்டிருந்தார்.. அவர் மரணத்திற்குப் பிறகு தனக்கான வாழ்க்கையைத் தேடி, அக்கிராமத்தை விட்டு வெளியேறிய தத்து, மாதம் 5,000 சம்பளத்திற்கு ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்துள்ளார்.
 

மாற்றம் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கும். வாய்ப்பு எப்படி வேண்டுமானாலும் நம்மை அடையும். அந்தப் பெட்ரோல் பங்க்கில்தான் தத்துவின் வாழ்க்கைக்கான மாற்றம் தொடங்கியது. அங்கு அடிக்கடி வரும் சில ராணுவ வீரர்களைப் பார்த்து, தானும் ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆசையும் அடுத்த வருடமே நிறைவேற, இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார் தத்து பொக்கானல். 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட இவரைப் பார்த்ததும், சக ராணுவ வீரர்கள் இவரை படகோட்டக் கற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

அடிப்படையில் தண்ணீர் என்றாலே பயம் கொண்டவரான தத்துவிற்கு அவ்வளவு எளிதாக படகோட்ட வரவில்லை.

“நான் முதன்முதலாக ஒரு நீர்ப்பரப்பைப் பார்த்ததே புனே ராணுவ முகாமில்தான். பயிற்சியின் போது படகு பலமுறை கவிழ்ந்தது. பாதுகாப்புக் குழுவினர்தான் என்னை மீண்டும் மீண்டும் படகில் அமர வைத்தனர். படகோட்டுதல் நமக்கானது அல்ல என்று நினைத்தேன். போகப்போக எனக்கும் தண்ணீருக்கும் ஏதோ ஒரு பந்தம் இருப்பது போல் உணர்ந்தேன். அதைக் கற்றுக்கொள்ள எனக்கு ஒரு வருடம் எடுத்துக் கொண்டது” என்கிறார் தத்து.

தங்கள் பகுதிக்கு வரும் தண்ணீர் வண்டிக்காக மணிக்கணக்கில் குடத்தோடு நின்றுகொண்டிருந்தவரான தத்து, அதுவரை தன் வாழ்நாளில் அவ்வளவு தண்ணீரை ஒரே இடத்தில் பார்த்தது இல்லையாம்.
   

அதன்பிறகு அவரும் தண்ணீரும் நெருங்கிய நண்பர்களாகவே மாறிவிட்டனர். 2014 ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஐந்தாம் இடம் பிடித்தவர், கடும் பயிற்சி செய்து அடுத்த ஆண்டு நடைபெற்ற 16 வது ஆசிய படகோட்டும் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 2014ல் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் சாம்பியனானார். கடந்த மாதம் தென் கொரியாவில் நடந்த ஆசியா – ஒசானியா தகுதிச்சுற்றுப் போட்டியில் 7 நிமிடம் 7.63 விநாடிகளில் பந்தய தூரமான 2 கிலோமீட்டரைக் கடந்த வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றார் தத்து பொக்கானல். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் ஒரே படகோட்டும் வீரர் பொக்கானல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
   

இந்த வெற்றிகளால் பொக்கானல் ஓய்ந்து விடவில்லை. அவரது லட்சியமும் கூட ஒன்றும் சாதாரணமானது இல்லை. தனது செயல்பாட்டை இன்னும் பன்மடங்கு உயர்த்த வேண்டுமென்று நினைக்கிறார். ஆறரை நிமிடங்களுக்குள் இலக்கை அடைவதே தனது லட்சியம் எனக்கூறும் தத்து, விபத்தால் படுகாயமடைந்த தனது தாயைத் தற்போது பார்த்து வருகிறார். ஆனால் இந்த நிலையிலும் அவரது கரங்கள் தாய்நாட்டிற்காக பதக்கம் வெல்லத் துடிக்கின்றன.

தங்கப் பதக்கம் வெல்வதைக் கனவாகக் கொண்ட தத்துவிற்கு அதைவிடப் பெரிய ஆசை ஒன்று உள்ளது. அது, தனது கிராமத்திற்காக தண்ணீர் கொண்டு வருவது. நமது ஆசையான ஒலிம்பிக் தங்கமும், தத்துவின் ஆசையான தண்ணீரும் ஒருசேரக் கிடைக்க  பிரார்த்திப்போம்!
   

-மு.பிரதீப் கிருஷ்ணா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close