Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி, செல்போன் அழைப்புகளின் துண்டிப்புக்கு இழப்பீடு கிடையாது!

 

செல்போன் பேசும்போது இடையே இணைப்பு துண்டிக்கப்படும் அழைப்புகளுக்கு ஒரு ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொலைபேசி சேவையில் அழைப்புகள் துண்டிக்கப்படும் பட்சத்தில், அதற்காக வாடிக்கையாளருக்கு தொலை தொடர்பு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த ஜனவரி 1ம் தேதி அறிவித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், வோடஃபோன் உள்ளிட்ட 21 நிறுவனங்களை கொண்ட தொலைத்தொடர்பு சேவையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது. டிராயின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன் வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொலைத்தொடர்பு சேவையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, டிராய் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்று தனது வாதத்தின்போது சுட்டிக் காட்டினார்.

மேலும், "ஒருநாளைக்கு 250 கோடி ரூபாய் வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து சம்பாதிக்கும் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனங்கள், நுகர்வோர்களின் நலன் கருதி, டிராய் உத்தரவின் அடிப்படையில் தங்களது சேவையை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே தீர்ப்புக்கு முன் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், செல்போன் பேசும்போது இடையே இணைப்பு துண்டிக்கப்படும் அழைப்புகளுக்கு ஒருரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என டிராய் பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த உத்தரவு தன்னிச்சையானது, நியாயமற்றது, வெளிப்படைத் தன்மையற்றது என்பதால் டிராய் பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்வதாக  அறிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ