Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தான் தற்கொலை தீவிரவாதிக்கு இந்திய ஆதார் அட்டை!

ஜம்மு: பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதியை காஷ்மீர் போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் இருந்து ஆதார் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில், ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த தற்கொல தீவிரவாதி அப்துல் ரகுமான் என்ற ஷாபீர் அகமது கானை (வயது 23) அவர்கள் கைது செய்துள்ளனர். மேலும், தற்கொலை தீவிரவாதியிடம் இருந்து ஷாபீர் அகமது கான் என்ற பெயரில் அவனுடைய புகைப்படம் அடங்கிய ஆதார் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது பாதுகாப்பு படையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி இம்தியாஸ் ஹுசைன் கூறுகையில், ''இது ஒரு பெரிய சாதனை. கைது செய்யப்பட்டு உள்ள தீவிரவாதி, தீவிரவாத இயக்கத்தின் பாரமுல்லா கமாண்டர். தீவிரவாதி ஒரு தற்கொலைப்படை தளத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்து உள்ளார். பாரமுல்லா பகுதியை இயக்கி உள்ளார். மேலும், அந்த தீவிரவாதியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ள ஆதார் அட்டை போலியாககூட இருக்கலாம். நாங்கள் அந்த ஆதார் அடையாள அட்டையை பரிசோதனை செய்து வருகிறோம்" என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், தீவிரவாதி அகமது கான் கடந்த ஜனவரி மாதம் மாஷில் செக்டாரில் இந்தியாவிற்குள் நுழைந்து உள்ளார். தீவிரவாதிக்கு பாகிஸ்தானின் பாலகோடேவில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் மற்றும் முக்கிய பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் விதமாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பாரமுல்லாவில் தீவிரவாத மையத்தை அமைப்பதில் தொடர்ச்சியாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் மாதம் உதாம்பூர் தாக்குதலை அடுத்து உயிருடன் கைது செய்யப்பட்டுள்ள 4-வது தீவிரவாதிதான் ரகுமான். 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உதாம்பூரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து இரண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது நோமன் என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொரு தீவிரவாதி உஸ்மான் உள்ளூர்வாசிகள் உதவியுடன் உயிருடன் பிடிபட்டார். அவர் பாகிஸ்தானின் பைசாலாபாத்தை சேர்ந்தவர் என்பது பின்னர் விசாரணையில் தெரியவந்தது. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதி ஜாவித் அகமது உயிருடன் பிடிபட்டார். அவருடன் வந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்