Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சபரிமலையில் பெண்கள்..! எதிர்க்க 1 கோடி பேரைத் திரட்டும் முயற்சி

திருவனந்தபுரம்: சபரிமலை :ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரு கோடி பக்தர்களிடம் கையெழுத்து பெற்று பிரதமர், ஜனாதிபதியிடம் அளிக்க கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல நூற்றாண்டுகளாக ஆகம விதிகள் மற்றும் பாரம்பரிய கட்டுப்பாட்டு நெறிமுறைகள், தேவஸ்வத்தால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சமீபகாலமாக கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியான விசாரணையும் நடந்து வருகிறது. பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது தொடர்பாக ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளதால் இந்த பிரச்னை கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலையில் பெண் பக்தர்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கெல்லாம் ஒரு முடிவு காணும் நோக்கத்தில், சபரிமலையில் ஆகம, ஆசார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வலியுறுத்தியும், இது தொடர்பாக சபரிமலை வரும் பக்தர்களிடம் 1 கோடி கையெழுத்து வாங்கி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் அளிக்க கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்து உள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஒரு கோடி பக்தர்களிடம் கையெழுத்து பெறும் விதமாக துவக்க நிகழ்ச்சி நேற்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் தொடங்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் தந்த்ரி கண்டரரு மோகனரு முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ''நித்ய பிரம்மச்சாரியான சுவாமி அய்யப்பனை 10 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட பெண்களை தரிசிக்க அனுமதித்தால் சபரிமலையின் புனித தன்மை பாதிக்கப்படும்.

அதனால், காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த ஐதீகத்தை தொடர்ந்து கடைபிடிக்க வலியுறுத்தி 1 கோடி பக்தர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறோம். இந்த பணி முடிந்ததும் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை டெல்லியில் நேரில் சந்தித்து வழங்கி, எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவோம்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close