Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரகுராம் ராஜன் மிகத் தெளிவானவர்! - அருண் ஜெட்லி பாராட்டு

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் குறித்து சுப்பிரமணியன் சுவாமி முன்வைத்த கருத்துகளால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, டெல்லியின் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரகுராம் ராஜனை புகழ்ந்து பேசினார் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி.

சில நாட்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி,  பிரதமர் நரேந்திரமோடிக்கு "ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மனதளவில் முழுமையாக இந்தியர் அல்ல; அவர் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார். எனவே, உடனடியாக அவரை நீக்க வேண்டும்" என்று கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றின் பின்னணியாக இந்த கருத்தை சுப்பிரமணியன் சுவாமி முன்வைத்ததாக கூறப்பட்டது.

ஏற்கனவே ரகுராம் ராஜன், மோடி அரசின் சில கொள்கைகளை ஏற்க மறுத்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால், அவர் மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானவர் என்ற பிம்பம் ஏற்கனவே உள்ளது.

இந்நிலையில் புதுடெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, “ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மிகவும் தெளிவானவர். நிதி அமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே துறை ரீதியாக வலுவான உறவு உள்ளது. அந்த உறவு மிகவும் முதிர்ச்சியானது.

எனவே இந்த இரு துறைகளுக்கும் இடையே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் குறித்து முறையாக கலந்தாலோசிக்கப்படும். தவிர, பரஸ்பரம் ஒருவரது கருத்துக்கு மற்றொரு தரப்பு மரியாதை கொடுக்கும்” என்று  புகழ்ந்து பேசினார்.

ரகுராம் ராஜன் தொடர்ந்து மத்திய அரசின் கொள்கைகளை ஏற்க மறுத்து விமர்சித்து வருவதாக பாஜகவினர் சர்ச்சை கிளப்பி வந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அருண் ஜெட்லி பேசியதாக கூறப்படுகிறது.

 

எடிட்டர் சாய்ஸ்