Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2-ம் கட்ட மருத்துவ பொது நுழைவு தேர்வு நடக்கும்: மத்திய அரசு முயற்சி!

புதுடெல்லி: 2-ம் கட்ட மருத்துவ பொது நுழைவு தேர்வு கண்டிப்பாக நடக்கும். அதேவேளையில் இந்த தேர்வில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சித்து வருகிறது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு முன்னதாக பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தவும் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையின்போது, கண்டிப்பாக பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசுக்கு அனுமதி அளித்ததோடு, மே 1-ம் தேதி முதல் கட்ட தேர்வும், ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்வும் நடத்த வேண்டும் எனவும், ஆகஸ்ட் 17-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதும், பல்வேறு மாநில எம்.பி.க்கள் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதற்கான அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில், மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், கடந்த 20-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், நேற்று முன்தினம் (20-ம் தேதி) இரவு மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, “மருத்துவ பொது தேர்வை ஒத்திவைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்றும், ஜூலை 24-ந் தேதி திட்டமிட்டபடி 2-ம் கட்ட நுழைவுத்தேர்வு நடக்கும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் ஜே.பி.நட்டா பேட்டியளித்த அதேநேரத்தில், தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா, பொது நுழைவுத்தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்வது குறித்த அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை உறுதி செய்தார்.

அதேபோல், குஜராத் முதல்வர் அனந்திபென் பட்டேலும், தனது ட்விட்டர் வலைதளத்தில், பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முடிவெடுத்த மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்திருந்தார். இதுபோன்ற காரணங்களால், மருத்துவ பொது நுழைவு தேர்வு குறித்து பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று (21-ம் தேதி) மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முதல் கட்ட நுழைவுத்தேர்வு மே 1-ம் தேதி நடந்து விட்டது. அதேபோல், 2-ம் கட்ட தேர்வும் திட்டமிட்டபடி ஜூலை 24-ம் தேதி நடைபெறும்.

அதேவேளையில், பொது நுழைவுத் தேர்வில் உள்ள குழப்பத்தை நீக்கவும் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த தேர்வு குறித்து மாநில அரசுகள் சில பிரச்னைகளை மத்திய அரசின் முன்வைத்துள்ளன. எனவே, பொது நுழைவு தேர்வை அமல்படுத்தினால், மாநில அரசுகள் நடத்தி வரும் நுழைவுத் தேர்வின் நிலை என்ன? சி.பி.எஸ்.இ மற்றும் மாநில அரசு போர்டுகளின் பாடத் திட்டத்தில் உள்ள மாறுபாடு குறித்த பிரச்னையை எப்படி அணுகுவது? போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்'' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ