Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி... வழிகாட்டிய சாப்ட்வேர்!

'கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல;

தூங்கவிடாமல் செய்வது'.
-இது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பொன் வரிகள்.

தான் கனவில் கண்ட காட்சிகளைக் கடும் உழைப்பாலும் விடா முயற்சியாலும் உண்மையாக்கி, இமாலய வெற்றிபெற்று மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்துவருகிறார், மும்பையின்  உல்லாஸ் நகரைச் சேர்ந்த பிரன்ஜல் பாட்டீல்.

 நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பிரன்ஜல் பாட்டீல், கண் பார்வையற்றவர். ஆனாலும் மகத்தான சாதனை செய்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார்,   26 வயது பிரன்ஜல் பாட்டீல். பார்வையற்றவர் என்றாலும் சமீபத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம்  (UPSC) நடத்திய தேர்வில் வெற்றிபெற்றிருகிறார். பார்வையற்றவர், முதல் முயற்சியிலேயே IAS தேர்வில் வெற்றி பெறுவது என்பது சாதாரணம் இல்லை.

 ''ஆறு வயதில், சக மாணவியின் கையில் இருந்த பென்சில் தவறுதலாக என் கண்ணில் பட்டதால், காயம் ஆனது. பிறகு அது இன்ஃபெக்ஷனாகி, பார்வை பறிபோனது. பின்னர் சிறிது நாளிலேயே இன்னொரு  கண்ணின் பார்வையும் போனது. ஆனாலும்  எனக்கு படிப்பின் மீது ஆர்வம் போகவில்லை. நான் தொடர்ந்து படிக்கவேண்டும் என பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்காமல்,  தாதரில் உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்தனர். 12-ம் வகுப்பில் 85 சதவிகித  மதிப்பெண்கள் பெற்றேன். அதனால், கல்லூரியில் எளிதாக இடம் கிடைத்தது. முதலில் ஷாந்தாபாய் ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர்ந்தேன். பிறகு செயின்ட் சேவியர் கல்லூரியில் இருந்து அழைப்பு வரவே, பி.ஏ-வில் சேர்ந்தேன். நான் வசிக்கும் இடத்தில் இருந்து சத்ரபதி ரயில் நிலையம் அருகில் உள்ள கல்லூரிக்கு தினமும் வந்து சென்றேன். சாலையைக் கடக்க, ரயில், பேருந்தில் ஏறி இறங்க பலரின் உதவி தேவைப்பட்டது. அப்போது,  'நீ படித்து என்ன சாதிக்கப்போகிறாய்..?' என்று பலரும் கேட்டார்கள். அவர்கள் கூறும் வார்த்தைகள் என் மனதைப் புண்படுத்தினாலும், அதுவே எனக்கு உத்வேகத்தை தந்தது.

இந்தக் கல்லூரிதான் எனக்கு IAS பற்றி அறிமுகம் செய்துவைத்தது. இதுதான், பிளாக் அண்டு வொயிட் ஆக இருந்த என்னோட எதிர்காலத்தை, கலர்ஃபுல்லாக மாற்றியது.  2015-ல் MPhill படித்துக்கொண்டே IAS-க்கு தயார் ஆனேன். தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 773 வது ரேங்கில் தேர்வாகி உள்ளேன்.

IAS-க்கு என்னைத் தயார்படுத்தியதில் டெக்னாலஜிக்கு முக்கியப் பங்கு உண்டு. JAWS (Job Access with Speech) எனும் சாஃப்ட்வேரை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொண்டேன். என்னைப் போன்ற பார்வை இல்லாதவர்களுக்காக தயாரிக்கப்பட்ட சாப்ட்வேர் அது. இதில் பாடங்களைக் கேட்டுக்கொண்டே மனதில் பதியவைக்கலாம். IAS- தேர்வுக்கு சம்பத்தப்பட்ட புத்தகங்களை வாங்கி ஸ்கேன் செய்து, JAWS சாஃப்ட்வேர் மூலம் கேட்டுத் தெரிந்துகொள்வேன்.

எல்லாம் படித்த பின், நான்கு மணி நேரத்துக்குள் பரீட்சை எழுதி முடிக்கவேண்டும். நான் வேகமாகச் சொல்வதை, அதே வேகத்தில் எழுதக்கூடியவரைக் கண்டுபிடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். இறுதியில் என்னோட ஸ்நேகிதி விதூஷியை க் கேட்டேன். பரீட்சை எழுதுவதற்கு முன்பு நான் வேகமாகச் சொல்வதை கடகடவென எழுதமுடியுமா என்று செக் செய்துகொள்ள ட்ரையலில் ஈடுபட்டோம். இப்படி 10 முறை எங்களைத் தயார்படுத்திக்கொண்டோம். இறுதியில் எங்களுடைய காம்பினேஷன் சக்சஸ் ஆனது. இப்போது விதூஷி, என்னைவிட சந்தோஷத்தில் இருக்கிறார். தேங்க்ஸ் டு விதூஷி. என்னோட வெற்றிக்குப் பெற்றோரும், கணவர் கோமல்சிங்கும் உதவினார்கள்" என்கிறார் பிரன்ஜல்.

முழு மனதோடு கேட்க வேண்டும், புத்திக் கூர்மையோடு சிந்தித்து பிரச்னைகளைத் தீர்க்கவேண்டும்  என்பதுதான் பிரன்ஜல் பாட்டீலின் தாரக மந்திரம்.

வாழ்த்துவோம் இந்த நம்பிக்கை பெண்ணை...!

 
-என்.மல்லிகார்ஜுனா
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close