Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காங்கிரசுக்கு தேவை இதய அறுவை சிகிச்சை! -காங்கிரஸ் எம்.பி. கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த அறுவை சிகிக்சை முகப் பொலிவுக்கான அறுவை சிகிச்சையாக இருக்கக் கூடாது; இதய அறுவை சிகிச்சைக்கானதாக இருக்க வேண்டும் என்று மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் சத்யவிரத சதுர்வேதி தெரிவித்துள்ள கருத்து தற்போது காங்கிரசாரிடையே சர்ச்சையை வெடித்து உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, அஸ்ஸாமில் ஆட்சியைப் பறிகொடுத்தது. மற்ற நான்கு மாநிலங்களிலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது பற்றி கருத்து வெளியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், "கட்சிக்குத் தேவை அறுவை சிகிச்சை' என்று கூறினார். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, "காங்கிரஸ் காரிய கமிட்டி உள்ளிட்ட அமைப்புகளை மாற்றியமைக்க நேரம் வந்துவிட்டது' என்று கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் சத்யவிரத சதுர்வேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''காங்கிரஸ் கட்சியின் பின்னடைவைத் தொடர்ந்து கட்சியின் மாவட்ட, மாநில, தேசிய அளவில் சுயப்பரிசோதனை செய்ய வேண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறினேன். சிலர் கட்சிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பேசி வருகின்றனர். அறுவை சிகிச்சை வேண்டும் என பேசி வரும் தலைவர்கள் முதலில் சுயப்பரிசோதனை செய்து கொள்ளட்டும். தங்களின் வளர்ச்சி பற்றி அவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்தின் விளைவாகத்தான் இதுபோன்ற கருத்தை கட்சித் தலைவர்கள் வெளியிடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த அறுவை சிகிக்சை முகப் பொலிவுக்கான அறுவை சிகிச்சையாக இருக்கக் கூடாது; இதய அறுவை சிகிச்சைக்கானதாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியை அளித்த மக்கள் பற்றி கட்சி மேலிடம் சிந்திக்க வேண்டும். கட்சியின் தொண்டர்களை ஒருங்கிணைத்து, கட்சியைப் பலப்படுத்தி, புத்துயிரூட்டக் கூடிய தலைவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பா.ஜ.க.வை முறியடிக்க வேண்டுமானால் தனது பண்புகளை காங்கிரஸ் கட்சி மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றார்.

கட்சிக்கு "இதய அறுவை சிகிச்சை வேண்டும்' என சத்யவிரத சதுர்வேதி வெளியிட்ட கருத்து, சோனியாவின் தலைமை மாற்றத்தையை வலியுறுத்தும் கருத்தாகப் பார்க்கப்படுகிறது. மூத்த தலைவராக இருக்கும் சத்யவிரத சதுர்வேதியின் இந்தக் கருத்து, காங்கிரஸின் அனைத்து மட்டங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இது குறித்து சத்யவிரத சதுர்வேதியிடம் இதுவரை காங்கிரஸ் மேலிடம் விளக்கம் எதுவும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ