Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2 பெண்கள் உள்பட 19 அமைச்சர்கள்; கேரள முதல்வராக நாளை பதவி ஏற்கிறார் பினரயி விஜயன்

திருவனந்தபுரம்; கேரள முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பினரயி விஜயனுக்கு அம்மாநில கவர்னர் சதாசிவம் நாளை பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். பதவியேற்பு விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒடுக்கப்பட்ட சமூகமான 'கள்' இறக்கும் குடும்பத்தில் 1944 ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி கண்ணூரில் பிறந்தவர் பினரயி விஜயன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து படிப்படியாக வளர்ந்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஆனார்.

1964 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின் முன்னோடியான கேரள மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக ஆன பினரயி விஜயன், 1970 ஆம் ஆண்டில் 26 வயதில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றார். அவசரநிலைக் காலத்தின்போது கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த அவர் அப்போதைய அரசால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டார். அப்போது 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

1996 ஆம் ஆண்டு மின்சாரத்துறை அமைச்சரானார். 1998 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வானார். தற்போது  ஆளும் கட்சியாக இருந்த, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை வீழ்த்தி விட்டு இடதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. புதிய முதல்வராக இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் பதவியேற்கிறார்.

இதனைத்தொடர்ந்து அவரது அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பட்டியலை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் பினரயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் இடது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 12பேருக்கும் வலது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 4 பேருக்கும் கூட்டணி கட்சிகளான ஜனதா 1, என்.சி.பி. 1, கேரள காங்கிரஸ் (எஸ்) 1, ஆகிய 19 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான வி.எஸ். அச்சுதானந்தன் இந்த முறையும் முதல்வராக பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்.
ஆனால் அந்த பதவி அவருக்கு கிடைக்கவில்லை . இதனால் அவரும் அவரது ஆதரவாளர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் சிறப்பு பதவி அச்சுதானந்தனுக்கு அளிக்கப்படும் என்று கட்சியின் தலைமை அவரை சமாதானப்படுத்தியுள்ளது.

ஆனாலும் அச்சுதானந்தன் ஆதரவாளர்கள் சமாதானம் அடையவில்லை. நேற்று அமைச்சர்களை தேர்வு செய்யும் கூட்டம் முடிந்ததும், அச்சுதானந்தன் ஆதரவாளர்கள் அச்சுதானந்தனை ஆதரித்தும் பினரயி விஜயனை எதிர்த்தும் கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில், பினரயி விஜயன் தலைமையில், புதிய அரசு, நாளை பொறுப்பேற்கவுள்ள நிலையில், அமைச்சர்களின் பட்டியல் தயாராகி உள்ளது. அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள, 19 பேரில், எட்டு பேர் புதிய முகங்கள். இரண்டு  பெண்கள்.

மார்க்சிஸ்ட் சார்பில், அச்சுதானந்தன் முதல்வராக இருந்த, 2006 ம் ஆண்டு அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, தாமஸ் ஐசக், ஏ.கே.பாலன், ஜி.சுதாகரன் போன்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இ.பி.ஜெயராஜன், கே.கே சைலஜா, டி.பி.ராமகிருஷ்ணன், சுரேந்திரன், மொய்தீன், மெர்சி குட்டியம்மா, ரவீந்திரநாத், கே.டி.ஜலீல் ஆகியோர் அமைச்சர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.
புதிய சபாநாயகராக, ஸ்ரீராமகிருஷ்ணன் பதவியேற்கிறார்.

இ.கம்யூ., சார்பில், சந்திரசேகரன், சுனில்குமார், திலோத்தமன், கே.ராஜூ ஆகியோர் இடம் பெறுகின்றனர் . நாளை திருவனந்தபுரத்தில் ஆளுநர் சதாசிவம், பினரயி விஜயனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

- த.ராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ