Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றாம் ஆண்டில் மோடி...730 நாட்களும் 'ஏழரை' சர்ச்சைகளும்..!

ன்றுடன் மோடி பிரதமராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைகின்றன. மூன்றாம் ஆண்டை நோக்கி  அடியெடுத்து வைக்கும் மோடியின் ஆட்சி, மக்களின் வாழ்வில் எத்தகைய முன்னேற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாங்களும் சாதித்துள்ளோம் என மார்தட்டுகிறார்கள் பா.ஜனதா அமைச்சர்கள்.

2014- ல் சமூக வலைதளங்கள் மூலம் மோடி ஏற்படுத்திய அதிர்வலைகளுக்கும், ' ஆப் கி பார் , மோடி சர்க்கார் ' என்ற மந்திர சொற்களுக்கும் இந்திய மக்கள் மட்டும் அல்ல, வெளிநாடு வாழ் மக்களும் சொக்கிப்போனார்கள். அது, தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்தது. 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

இந்நிலையில் மோடியின் கடந்த இரண்டாண்டு கால ஆட்சியில் தேர்தல்  செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்...
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தது என்ன ?

பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் செய்த தில்லுமுல்லுகளை ஆராய்ந்து களையெடுக்கவே , மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு பல மாதங்கள் தேவைப்பட்டன. இரண்டு ஆண்டுகளில், இந்தியா மாதிரியான ஒரு தேசத்தில், ஒரு அரசு எவ்வளவு ஈடுபாட்டுடன் வேலை செய்ய முடியுமோ, அதைச் செய்து அடுத்தக்கட்ட நகர்வில் இருக்கிறது பாஜக.

சமூக வலைத்தளங்களில், மோடி அரசில் இடம்பெற்றுள்ள  அமைச்சர்கள் போல், திறம்பட செயல்பட்டவர்கள், இதற்கு முன்னர் இல்லை. ட்விட்டர் தளத்தில்  மக்களுக்காக ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர்களில் , வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மிகவும் முக்கியமானவர். வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் பலருக்கு  ட்விட்டர் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கிறார்.

சுதந்திர இந்தியாவில், இன்னமும் மின்சார வெளிச்சத்தை பார்க்காத கிராமங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், அப்படிப்பட்ட பல கிராமங்களுக்கு இந்த இரண்டு ஆண்டுகளில்  மின்வசதியை வழங்கியிருக்கிறது மத்திய அரசு. இந்த இரண்டு ஆண்டுகளின் மிகப்பெரிய சாதனை இதுதான்.

கங்கை நீரில் உருவாகியிருக்கும் நச்சுத்தன்மை அதிகரித்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்னர் பிபிசி ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தது. கங்கையை புனிதப்படுத்த சுமார் 20,000 கோடியை ஒதுக்கி இருக்கிறது மத்திய அரசு. அது நிறைவேற்றப்பட்டால் மோடிக்கு பாராட்டுக்கள் குவிந்துகொண்டே இருக்கும்.

பிரதமர் மோடி, கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் பல வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். வெளிநாட்டு தலைவர்களுடன் ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டார். அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை பலரும் விமர்சித்தாலும், அதனால் நமது வெளிநாட்டு உறவு மேம்பட்டதுடன், அந்நிய நேரடி முதலீடும் அதிகரித்தது. மோடி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த பிப்ரவரி வரையிலான காலத்தில் இதுவரை இல்லாத அளவாக  51 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. இதை இந்திய பொருளாதார நிபுணர்கள் பாராட்ட தவறவில்லை.

ஆனால், இவை எல்லாவற்றையும் கடந்து இரண்டு ஆண்டுகளில் செய்யத்தவறிய விஷயங்களின் பட்டியலும் இருக்கத்தான் செய்கிறது.

குவிந்த திட்டங்கள்


'ஸ்டார்ட்-அப் இந்தியா', 'ஸ்வச் பாரத்' (க்ளின் இந்தியா ), 'டிஜிட்டல் இந்தியா', 'மேக் - இன் இந்தியா' என இந்தியாவின் பெயர்களில் திட்டங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. 'க்ளின் இந்தியா' திட்டத்திற்காக  பிரபலங்கள் குப்பை அள்ளும் நிகழ்வுகள் அரங்கேறின. ஆனால் அதன்பிறகு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

'அனைவருக்கும் வங்கி கணக்கு' என திட்டம் கொண்டுவந்து, 1.5 கோடி வங்கி கணக்குகள் புதிதாக துவக்கப்பட்டன. ஆனால் அந்த கணக்குகள் பலவும் செயல்படாத கணக்காக மாறி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு எந்தவிதமான வழிவகையும் செய்யாமல் வங்கி கணக்கு ஆரம்பித்து எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

பெட்ரோல், டீசல்

2012 ம் ஆண்டு காங்கிரஸ் அறிவித்த பெட்ரோல், டீசலின் விலை ஏற்றத்தை எதிர்த்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேசிய அளவிலான போராட்டத்தை அறிவித்தது. காங்கிரஸ் ஆட்சியில் இப்படி ஒவ்வொரு முறை விலை ஏற்றம் செய்யப்பட்டபோதும் போராட்டங்களால் காங்கிரஸை தகிக்க வைத்தது பாஜக. தற்போது, அதை செய்யும் நிலையில்கூட எதிரணியான காங்கிரஸ் இல்லை என்பது வேறு விஷயம். " பெட்ரோல், டீசல் விலையை தீர்மானிப்பது எண்ணெய் நிறுவனங்கள் தான் என்றாலும், அதைக் கட்டுப்பாட்டில் வைக்கும் அதிகாரம் கூடவா ஆளும் அரசாங்கத்திற்கு இல்லாமல் போய்விட்டது"  என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெயின் பேரல் விலைக்கும், சில மாதங்களுக்கு முன் இருந்த கச்சா எண்ணெய் பேரல் விலைக்கும் 100 டாலர்கள் வரை வித்தியாசம் இருந்தது. கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக சரிந்தபோது பெட்ரோல், டீசல் விலை அந்த அளவு குறையவில்லை. அதற்கு பதிலாக கலால் வரி உயர்த்தப்பட்டது. கச்சா எண்ணெய்யின் விலை சரிவினால் அதிக லாபம் ஈட்டியது எண்ணெய் நிறுவனங்கள்தான்.

குறைந்தபட்சம் டீசல் விலையையேனும் குறைத்து இருந்தால், விலைவாசி எவ்வளவோ குறைந்து இருக்கும்? இந்த விஷயம், உலகை வலம் வரும் மோடிக்கு தெரியாமல் போனது ஏன் என்பதுதான்  புரியவில்லை.

சகிப்புத் தன்மை

உணவிற்காக ஒரு விலங்கை கொல்வது தவறில்லை என இந்திய சட்டம் சொல்கிறது. ஆனால், தாத்ரியில் 52 வயதான மொஹம்மத் அக்லாக் என்பவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக கொல்லப்படுகிறார். இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல, இந்துக்கள் சிலரும் கூட மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். ஆனால், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வளவு ஏன், டெல்லியில் இருக்கும் கேரள அரசின் விடுதியில் மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறதா என எந்தவித அனுமதியுமின்றி, சோதனை நடத்தியது மத்திய அரசின் கீழ் இயங்கும் டெல்லி காவல்துறை.
கன்னட எழுத்தாளர் கல்பர்கி, பாஜகவின் சகிப்பின்மைக்கு பலியான மற்றொரு நபர்.

மொஹம்மத் அக்லாக் , கல்பர்கி என இந்த இருவரது உயிரிழப்பு சம்பவங்களுக்குப்பின், பல எழுத்தாளர்கள் சகிப்பின்மை குறித்து கேள்விகள் எழுப்பினர். நயன்தாரா ஷேகல், சாகித்ய அகாடமி தனக்கு தந்த விருதை திருப்பிக் கொடுத்தார். தொடர்ந்து 30க்கும் அதிகமானோர், மத்திய அரசு தங்களுக்கு அளித்த கவுரவ விருதுகளை திருப்பி அளித்து, தங்கள் கண்டனத்தை பதிவுசெய்தனர்.

'Incredible india ' விளம்பரங்களில் இருந்து, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சத்யமேவ ஜயதே' வரை அமீர்கானை கொண்டாடிய அதே தேசம், அவரின் உருவபொம்மையை எரித்தது வீதிகளில். இந்தியாவில் நிலவும் மத துஷ்பிரயோகங்களுக்கு பயந்து வெளிநாட்டில் வாழலாம் என அமீர்கானின் மனைவி கருத்து சொன்னதற்காகத்தான் இப்படி ஒரு எதிர்வினையாற்றினர்.

ஆனால் இத்தனை களேபரங்கள் அரங்கேறியபோதும், அதனை தடுக்க வேண்டிய மற்றும் அதற்கு பதிலளிக்க  வேண்டிய பொறுப்பில் இருக்கும் மோடி,  மௌனித்து இருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தின.

வறுமை ஒழிப்பா...  இல்லை காங்கிரஸ் ஒழிப்பா ?

"இந்துக்களும் இஸ்லாமியர்களும் அவர்களுக்குள் சண்டையிடுவதை விட்டுவிட்டு , வறுமைக்கு எதிராக போராடுங்கள்" என கடந்த அக்டோபரில் ஆற்றிய ஒரு உரையில் குறிப்பிட்டார் மோடி. முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விஷயம்தான் இது. ஆனால்  இப்படி செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதுதானே அரசின் கடமை. ஆனால் மோடி அரசின் கவனம் வறுமை ஒழிப்புக்கு பதிலாக காங்கிரஸ் புகழ் பாடும் திட்டங்களில் உள்ள பெயர்களை நீக்குவதில் திரும்பியது. சுதந்திர இந்தியாவில் 49 ஆண்டுகளை காங்கிரஸ்தான் ஆண்டது. ஒன்றை அழிக்க வேண்டும் என்றால், அதன் பெயரை முதலில் வேறு பெயராக மாற்ற வேண்டும் என்பது மோடி அரசிற்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது போலும். 'இந்திரா காந்தி ராஜ்சபா புரஸ்கார், ராஜீவ் காந்தி ராஷ்ட்ரிய க்யன் - விக்யன் மௌலிக் புஸ்டக் லேகன் புரஸ்கர் ' போன்ற விருதுகள், திட்டங்களில் இருந்து, நேரு குடும்பத்து பெயர்கள் அதிரடியாய் நீக்கப்பட்டன .

அரசின் திட்டங்களில் தனிநபரின் பெயரால் அழைக்கப்படுவது சரியல்ல என்பதால் இது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும், அரசின் அத்தனை திட்டங்கள் எல்லாவற்றிலும், இதனை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் தலைவர்களை மட்டும் குறிவைத்ததுதான் மோடியின்  ராஜதந்திரத்தை வெளிப்படுத்தியது.

விளம்பர மோகமும், செயல்பாடுகளும்

2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் , வெளிநாட்டு பயணத்திற்காக மோடி அணிந்த சட்டை, உலக அளவில் பிரபலம் ஆனது. மோடியும் , ஒபாமாவும் பேசிய உலகப் பொருளாதார விஷயங்கள் தலைப்பு செய்திகளாக வருவதற்கு பதில், சட்டையின் விலை 10 லட்சம் என்றும், அதில் பொன் எழுத்துக்களில் அவரது பெயர் பொறிக்கப்பட்டு இருப்பதும்தான் தலைப்புச் செய்தி ஆனது. 

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஏழைகளின் வறுமையை போக்குவதற்காக திட்டமிடும் ஒருவர்,  இத்தனை ஆடம்பரத்தை வெளிப்படுத்தியது தனிப்பட்ட அவரது வாழ்க்கைக்கும், அரசியல் நிலைப்பாட்டிற்கும் உள்ள முரணை வெளிச்சமாக்க்கியது.

பத்தாண்டுகள், காங்கிரஸின் மன்மோகன் சிங் பேசாமலே ஆட்சியை நகர்த்தினார் என்றால், மோடி சமீப காலமாக அரசியலுக்காக பேசும் சில விஷயங்கள் கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. கொல்கத்தாவில் கடந்த மாதம் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலர் இறந்தனர்.

" இங்கே அவல ஆட்சி நடக்கிறது என்பதை குறிப்பிட நமக்கு கடவுள் சொல்லும் செய்திதான் இது " என்றார் மோடி. இருந்தாலும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அவல ஆட்சியே தொடரட்டும் என 211 இடங்களில் வெற்றி பெறச் செய்திருக்கின்றனர் மக்கள். “சோமாலியாவைவிட,  கேரளாவில் பெண் சிறார்களின் பிறப்பு சதவிகிதம் குறைவு” என பேசி,  கேரளாவிலும் கடும் விமர்சனத்தை எதிர் கொண்டார்.

இந்தியாவில் படிப்பறிவு மிக்க மாநிலம் என்பதைக் காட்ட, மோடிக்கு எதிராக கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸும் இணைந்து #pomonemodi என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் ட்ரெண்டாக்கினார்கள் கேரளத்து இளையதலைமுறையினர்.

மத்திய பல்கலைகழகங்களும் மத்திய அரசும்.

'ஹோட்டல் மெனு கார்டில் ஜாதி பார்க்கப்படுகிறதா' என்கிற மாணவர்களின் டாக்குமென்டரியை தம் வளாகத்தில் ஒளிபரப்ப தடை செய்தது JNU பல்கலைக்கழகம். அம்பேத்கர் இயக்கத்தின் சார்பாக போராட்டங்கள் நடத்தியதால், ரோஹித் வெமுலா என்ற பல்கலைக்கழக ஆய்வு மாணவரின் உதவித்தொகையை ரத்துசெய்தது பல்கலைக்கழகம். வெறுத்துப்போன அவர் தற்கொலை செய்துகொண்டார்.

இறந்த வெமுலாவிற்கு, ஒருவாரம் கடந்த நிலையில் அனுதாபக் கடிதம் ஒன்றை அனுப்பினார் மோடி. 'இந்தியத்தாய் ஒரு மகனை இழந்துவிட்டார்' என்று சொல்வதற்கு மோடி எடுத்துக்கொண்ட கால அவகாசம் ஒருவாரம். ஆனால், தமிழகத்தில் கடந்த வாரம் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும்போதே ஜெயலலிதா 'வெற்றிபெற்றதற்கு' வாழ்த்து தெரிவித்தார்.

உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை கண்டு  எரிச்சலான உச்சநீதிமன்றம்,  சில நாட்களுக்கு முன்  மத்திய அரசுக்கு குட்டு வைத்தது.

கறுப்பு பணம், ஸ்விஸ், பனாமா  இன்ன பிற..


தேர்தலின்போது, வாக்குறுதிகளாக சொல்லப்பட்டதில் முக்கியமான விஷயம் , சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டு இருக்கும் கறுப்புப் பணத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவருவது. ஆனால், சுவிஸ் வங்கி சர்ச்சை, தற்போதைய லேட்டஸ்ட் பனாமா பேப்பர்ஸ் வரை பதுக்கல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கறுப்புப்பணம் வெளிச்சத்திற்கு வந்த பாடில்லை.


இந்த இரண்டு ஆண்டுகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஒன்றுமே செய்யவில்லை என சொல்வது அபத்தம்தான் என்றாலும், அதற்கு அவர்கள் செய்யும் விளம்பரங்கள்தான்  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தைத் தூண்டியுள்ளன. 

இரண்டு ஆண்டுகளை மட்டுமே வைத்து, ஒரு அரசை எடைபோட முடியாது. பெயர் அளவிலாக இருக்கும் திட்டங்கள், விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவான 'இந்தியா 2020'-ஐ அதற்கு முன்னதாகவே இந்தியா எட்டும்.

ராபர்ட் ஃப்ராஸ்டின் " தேர் ஆர் மைல்ஸ் டூ கோ பிஃபோர் ஐ ஸ்லீப்" என்னும் வாசகத்தை நேரு தினமும் ஒருமுறை தன் டைரியில் எழுதுவாராம்.

நேருவை மோடிக்கு பிடிக்காவிட்டாலும், வேறு வழியில்லை. மோடியும் இதனை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறார். ஏனெனில், இந்தியா செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கிறது.

- கே.ஜி.கார்த்திகேயன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close