Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' நாங்கள் கொத்தடிமைகள் அல்ல!' -மருத்துவர்கள் போர்க்கொடி

அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தப்படும் என பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு டாக்டர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. ' இதனால் இளம் மருத்துவர்களுக்கு கிடைக்க இருக்கின்ற அரசு வாய்ப்புகளும் பறிபோய்விடும். மருத்துவ சேவையின் தரம் பாதிக்கப்படும்' எனவும் கொந்தளிக்கின்றனர்.

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பேரணியில் பேசிய மோடி, ' மத்திய- மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தப்போவதாக’ அறிவித்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், " இது மருத்துவர்களின் உரிமைகளுக்கு எதிரானது. வாழ்நாள் முழுவதும் சமூகத்திற்காக உழைத்தவர்களுக்கு ஓய்வளிக்க மறுக்கும் செயலாகும். இதைவிட அப்பட்டமான மனித உரிமை மீறல் இருக்க முடியாது. 58 வயதில் ஓய்வு அளித்து, ஓய்வுகாலத்தில் அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பை அரசு தட்டிக்கழிக்கும் செயலில் ஈடுபடுகிறது.

மருத்துவப் பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை இந்திய மருத்துவக் கழகம் 70 ஆக உயர்த்தியுள்ளது. அதை 75 ஆக உயர்த்திடவும் அரசு முயல்கிறது. இந்நிலையில் அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதையும் 65 ஆக உயர்த்துவது மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவையின் தரத்தை வெகுவாக பாதிக்கும். இளம் டாக்டர்களின் அரசு வேலை வாய்ப்பையும், பதவி உயர்வையும் இதுபோன்ற அறிவிப்புகள் பாதிக்கும். தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. மத்திய அரசுக்கு இணையான ஊதியமோ, படிகளோ,சலுகைகளோ வழங்குவதில்லை. அதேசமயம் அவர்களுக்கு விருப்ப ஓய்வும் மறுக்கப்படுகிறது.

இந்நிலையில், ஓய்வு பெறும் வயதை மேலும் உயர்த்துவது மருத்துவர்களின் உழைப்பைச் சுரண்டவும், மறைமுகமாக அவர்களை கொத்தடிமைகளைப் போல நடத்தவுமே வழிவகுக்கும். இந்தியா முழுவதும் ஏராளமான இளம் டாக்டர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதன் மூலம், நிரந்தர வேலைவாய்ப்புக்கள் இல்லாத மருத்துவத்துறை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இளம் டாக்டர்களுக்கு ஊதியமாகவும், இதர சலுகைகளாகவும் வழங்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்த நினைக்கும் மிக மோசமான சிக்கன நடவடிக்கை என கண்டிக்கிறோம். மக்கள் நல்வாழ்வு என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை மாநில அரசுகள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த உரிமையை மாநில அரசுகளிடமிருந்து, மத்திய அரசு பறிப்பது என்பது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது" எனக் கொந்தளித்தார் மருத்துவர் ரவீந்திரநாத்.

மருத்துவ நுழைவுத் தேர்வில் மாநில அரசின் சுயாட்சிக்குள் மத்திய அரசு நுழைவதாக கொந்தளித்த மருத்துவர்கள், இப்போது ஓய்வு பெறும் வயது அறிவிப்புக்கு எதிராக அணி திரளத் தொடங்கிவிட்டனர்.

ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ