Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராணுவ வெடிமருந்து கிடங்கில் திடீர் வெடிவிபத்து... 2 அதிகாரிகள்; 20 வீரர்கள் பலி!

நாசிக்: மகாராஷ்ட்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ வெடி மருந்து கிடங்கில் ஏற்பட்ட பயங்க வெடி விபத்தில் 2 அதிகாரிகள் உள்பட 20 வீரர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகி உள்ளார்கள்.

மகாராஷ்ட்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள புல்கான் வர்தா என்ற இடத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவவெடி மருந்து கிடங்கு உள்ளது. இங்கு ராணுவத்துக்கு தேவையான வெடி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன. இங்கு, ராணுவ அதிகாரிகள் தலைமையிலான ராணுவ வீரர்கள் இரவும் பகலும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் இந்த கிடங்கில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே கிடங்கில் இருந்த வெடிமருந்துகள் பயங்கரமாக வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிய தொடங்கின. அப்போது, 2-வது முறையாகவும் வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அந்த கிடங்கில் இருந்த வெடி மருந்துகளும் பயங்கரமாக தீப்பற்றி எரிய தொடங்கின.

இதை தொடர்ந்து, உடனே அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், அருகில் நெருங்க முடியாத அளவுக்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததால், தீயணைப்பு படையினரால் அப்பகுதியை நெருங்க முடியவில்லை. ஆனாலும் தீயணைப்பு வீரர்களும், ராணுவ வீரர்களும் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அந்த கிடங்குக்குள்ளே சிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த ராணுவ அதிகாரிகளையும், வீரர்களையும், கிடங்கை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் உள்ளே சென்று மீட்டு வந்தனர். இதில், தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பல வீரர்கள் மீட்கப்பட்ட நிலையில், 2 ராணுவ அதிகாரிகளும், 18 ராணுவ வீரர்களும் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள்.

மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் உடனடியாக புல்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

தீ தொடர்ந்து எரிந்து கொண்டு இருப்பதால், இந்த ராணுவ கிடங்கைச் சுற்றி உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மற்றுக் அந்த கிராமத்து மக்கள் என சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக அப்பகுதியில் இருந்து பத்திரமான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். மேலும், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான தீயணைப்பு படையினரும், ராணுவ வீரர்களும் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக அறியப்படாத நிலையில், இந்த விபத்து கவனக்குறைவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் விரைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, ''மத்திய ராணுவ கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை அளித்துள்ளது. விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

விபத்தில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்கிறேன். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு நிலைமையை சீர்செய்யுமாறு பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை கேட்டுக் கொண்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ''ராணுவ கிடங்கில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும்" என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ