Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எந்த வி.ஐ.பி.க்காகவும் போக்குவரத்து நிறுத்தப்படாது... -கிர்ரடிக்கும் கிரண்பேடி

புதுச்சேரி: எந்த வி.ஐ.பி.க்களுக்காகவும் புதுச்சேரியில் போக்குவரத்து நிறுத்தப்படமாட்டாது என்று ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண்பேடி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கடந்த 29-ம் தேதி பொறுப்பேற்றார். அன்றைய தினத்திலிருந்தே அவர் பிறப்பிக்கும் அதிரடி உத்தரவுகள் அனைத்தும் அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளையும் கதி கலங்கச் செய்து வருகிறது. அனைத்து அரசு ஊழியர்களும் காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும் என்றும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள், அதிகாரிகளை சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்க ஏதுவாக அவர்கள் அந்த நேரத்தில் அங்கு இருக்க வேண்டும்.  மேலும், அந்த நேரத்தில் எந்தவித அலுவலக மீட்டிங்குகளும்கூட இருக்கக் கூடாது என்றும் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (31-ம் தேதி) மாலை கவர்னர் கிரண்பேடி தலைமையில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு நான்கரை மணி முதலே பொதுமக்கள் வர ஆரம்பித்தனர். அவர்களிடம் காவல்துறை பற்றிய கருத்துக் கேட்பு ஃபாரம் வழங்கப்பட்டு உடனே அதை நிரப்பியும் வாங்கினர். அப்போது அவர் கூறும்போது, ''புதுச்சேரி மிகவும் அழகான, அதேசமயம் அமைதியான மாநிலமம். இந்த சிறிய யூனியன் பிரதேசத்தில் நடக்கும் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவில்லை என்றால் காவல்துறை தங்கள் பணிகளை செய்யவில்லை என்பது தான் பொருளாகும்.

குற்றங்களை தடுப்பதில் காவல்துறை மட்டும் தனித்து செயல்பட முடியாது. பொதுமக்கள் பங்களிப்பும் அவசியமாகும். இரு தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் குற்றமில்லா நகராக புதுச்சேரியை உருவாக்க முடியும். புதுச்சேரியில் நடைபெறும் சமூகவிரோத செயல்கள், ஊழல், முறைகேடு, ரவுடிகள் குறித்த விவரங்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க காவல்துறை சார்பில் 1031 என்ற இலவச தொலைபேசி எண் இன்னும் ஒரு வாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டு செயல்படும்.

புகார்கள் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்படும். அவை, துணை நிலை ஆளுநர், தலைமை செயலர், காவல்துறை தலைவர் என மூவருக்கும் மட்டும் தெரியும். தகவல் தெரிவிப்போர் விரும்பினால் மட்டுமே அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். மேலும், தகவல் உண்மையாக இருந்தால் அவர்களுக்கு உரிய வெகுமதியும் அளிக்கப்படும். பொதுமக்கள் புகார்களை தெரிவிப்பதற்காகவே, தனி இ-மெயில் முகவரி அளிக்கப்படும்.

வணிகவரித் துறையின் ஆணையர், விற்பனை வரியை வசூலிக்கும் பணியை ஏற்கனவே துவங்கி விட்டார். மக்கள் தாங்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் ரசீதை கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசிடம் புதுவை கடன் பெற்று தனது நிர்வாகத்தை நடத்தி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை நாம் வட்டியாக செலுத்தி வருகிறோம். மத்திய அரசிடம் நிதி பெறாமல் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற அனைவரும் ஒத்துழையுங்கள். ஒரு வாரத்திற்குள் வணிகர்கள் தங்களது கணக்குகளை சரியாக்கி விடுங்கள்.

பள்ளிகளில் செயலர்கள், இயக்குநர்கள் திடீர் சோதனை நடத்துவார்கள். ஆசிரியர்கள் பணியில் உள்ளனரா என்பதை கண்டறிய இச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் நல்ல அரசு ஊழியர்களை பாராட்ட இந்த நடவடிக்கை அவசியமாகும். ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அதேபோல ஒரு வாரத்திற்குள் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட இடங்களை வாகனங்களை நிறுத்தினால் போக்குவரத்து போலீசார் அகற்றுவார்கள். போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு சம்பவ இடத்திலேயே உடனடி அபராதம் வசூலிக்கப்படும். இங்கு அனைவரும் சமமே. அதனால், எந்த வி.ஐ.பி.க்களுக்காகவும் போக்குவரத்து நிறுத்தப்படாததுடன் அவர்களின் வாகனங்களில் சைரன் ஒலியும் இருக்காது.  இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இதுதொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்படும். அரசு மற்றும் தனியார் மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

அரசியல் குறுக்கீடுகள், கெட்ட விஷயங்களாக இருந்தால் அவைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதேசமயம், அது நல்லதற்காக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதற்காக மக்கள், தன்னார்வலர், நிபுணர்கள் ஆகியோர் கருத்தறியப்படும். புதுச்சேரி மக்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக செலவிடப்படும். தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஆளுநர் மாளிகையில் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் பொதுமக்கள் என்னை சந்தித்து குறைகளை சொல்லலாம்" என்றார்.

- ஜெ.முருகன்

படங்கள்:
அ.குரூஸ்தனம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close