Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டு(ம்) வருவாரா ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடிவதையொட்டி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் அவரே மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன். இவரது மூன்றாண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் முடிவடைகிறது. 'ரிசர்வ் வங்கி தலைவர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் நீக்கப்பட வேண்டும்.  அவருக்கு செப்டம்பர் மாதம் பதவி முடிந்ததும் நீடிக்கக்  கூடாது’ என்று பாஜக வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி கடந்த வாரத்தில் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். மேலும் சில கட்சி நிர்வாகிகளும் இந்த கருத்தை வழிமொழிந்ததால் இந்த விவகாரம் பரபரப்பானது.

ஆனால் இதுகுறித்து பிரதமர் மோடி தனது கருத்தாக எதையும் சொல்லவில்லை. இதையடுத்து “என் கருத்தை யாரும் மறுக்கவில்லை;  எதிர்க்கவும் இல்லை; பிரதமர் மோடி கூட மவுனமாக இருக்கிறார். அதனால் அவர் கண்டிப்பாக பதவி நீட்டிக்க மாட்டார். பங்கு சந்தை சரிந்ததற்கு காரணம்  ரகுராம் ராஜன்தான் காரணம். இந்த பதவிக்கு ரகுராம்ராஜன் தகுதியில்லை என்பதற்கு இது ஒன்றே போதும்” என்றதோடு, ' இன்னும் ஆபத்து வராமல் இருக்க வேண்டுமானால் அவரை உடனடியாக நீக்க வேண்டியது முக்கியம்’ என்றும் சுப்ரமணியசாமி கூறி இன்னும் பரபரப்பை கூட்டினார்.

இதுபற்றி பிரதமர் அலுவலகத்திலிருந்தோ ரிசர்வ் வங்கி சார்பாகவோ எந்த பதிலும் அளிக்கப்படவில்லை
அதேசமயம் சுப்ரமணியன் சாமியின் கருத்துக்கு கட்சித்தலைமையிடம் பெரும் வரவேற்பில்லை என தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வாரம் டெல்லியில் நடந்த அரசு விழாவொன்றில் பேசிய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி,“ ரகுராம்ராஜன் தெளிவானவர்”என்றதோடு அவரை சகட்டுமேனிக்கு புகழ்ந்து தள்ளினார். இது மோடியின் குரலாகவே பொதுவெளியில் எதிரொலித்தது.

இதனிடையே பெரிய அளவில் ரகுராம் ராஜன் மீது மத்திய அரசுக்கு அதிருப்தி இல்லாததால் அவர் மீண்டும் மறு நியமனம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. மற்றவர்களுக்கு எப்படியோ பிரதமர் மோடிக்கு அவர் மீது நல்ல அபிப்ராயம் உள்ளது என பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மோடியின் ஆதரவு இருந்தால் அங்கு மாற்றுக்குரலுக்கு வாய்ப்பில்லை. எனவே அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் என அறுதியிட்டு சொல்கின்றனர் அவர்கள்.

அதே சமயம் பொருளாதாரத்தை மீட்க இந்திய வங்கிகளை புதுப்பிக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வங்கிகளின் வாராக்கடன் சுமை அழுத்தத்திலிருந்து விடுவிக்க ரகுராம் ராஜனே தொடர்ந்து கவர்னராக தொடர்வது நல்லது என மத்திய அரசு நினைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு ஆதாரமாக பிரதமர் மோடியின் சமீபத்திய பேச்சை ஆதாரமாக காட்டுகின்றனர்.  சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ரகுராம் ராஜன் மறு நியமனம் குறித்த கேள்விக்கு,“அவரது பதவிக் காலம் செப்டம்பர் வரை இருக்கிறது பதவி நீட்டிப்பு குறித்த கருத்துகளை தற்போது பேசவேண்டாம்” என்று அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்டதை சொல்கிறார்கள். இதனால் ஊடகங்களில் இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாவதை அவர் விரும்பாததையே காட்டுகிறது.

வளரும் நாடான இந்தியாவுக்கு அந்நிய முதலீட்டாளர்களால் விரும்பப்படும் நபரான ரகுராம் ராஜன் போன்றவர் மோடியின் எண்ணங்களை செயல்படுத்த தகுதியானவராக இருப்பார் என்பதால்  பதவி நீட்டிப்பு பந்தயத்தில் ரகுராம் ராஜன் வெல்வார் என்றே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சை வளையங்களில் இருந்து மீண்டு(ம்) வருவாரா ரகுராம் ராஜன்?...செப்டம்பரில் தெரியும்!
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ