Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓட்டு போடணுமா, 10 கோடி கொடுங்க..! பேரம் பேசிய எம்.எல்.ஏ.க்கள்



மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ரூ.5 கோடி முதல் 10 கோடி வரை எம்எல்ஏக்கள் பேரம் பேசியது தற்போது அம்பலமானதால் கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 எம்.பி.க்களின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிகிறது. இதையடுத்து 57 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க ஜூன் 11ம் தேதி தேர்தல் நடக்கிறது. அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வார்கள். இந்த தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த  24ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தது. இன்று வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள். மொத்தம் தேர்வு செய்யப்பட வேண்டிய 57 எம்.பி.க்களில் பெரும்பாலானவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு  விட்டனர். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. சார்பில் 4, தி.மு.க. சார்பில் 2 என 6 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சில மாநிலங்களில் மட்டும் மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 4 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து அங்கு புதிதாக 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதில் சுமூக நிலை ஏற்பட்டுள்ள நிலையில் 4வது எம்.பி.யை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது. கர்நாடக மாநில சட்டசபையில் மொத்தம் 224 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 124, பா.ஜ. க.வுக்கு 46, தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சிறிய கட்சிகள், சுயேச்சைகள் என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 45 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் 2 எம்.பி.யையும் பா.ஜ.க. ஒரு எம்.பி.யையும் எளிதாக தேர்ந்தெடுக்க முடியும். அதன்படி காங்கிரஸ் மேலிடம் ஆஸ்கர் பெர்ணான்டஸ், ஜெய்ராம் ரமேஷ் இருவரையும் வேட்பாளராக அறிவித்தது. பா.ஜனதா கட்சி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை வேட்பாளராக நிறுத்தியது. இவர்கள் மூவரும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இவர்கள் தேர்வுக்குப் பிறகு காங்கிரசிடம் 33 எம்.எல்.ஏ.க்கள் மீதம் உள்ளனர். எனவே அவர்கள் மூலம் மேலும் ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கே.சி.ராமமூர்த்தியை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமைய்யா நிறுத்தியுள்ளார். அதே சமயத்தில் 40 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா, 4வது எம்.பி. பதவியை கைப்பற்ற தொழில் அதிபர் பி.எம்.பாரூக் என்பவரை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது.

இதையடுத்து 4வது எம்.பி. பதவிக்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் மேலும் 12 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அந்த கட்சிக்கு மேலும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பண பேரம் நடந்து வருகிறது. குறிப்பாக சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரசும், ஐக்கிய ஜனதா தளமும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில் டைம்ஸ் நவ், இந்தியா டுடே ஆகிய இரு தொலைக்காட்சிகளும் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சில சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், சில மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களும் பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறி வாக்களிக்க தயாராக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியா டுடேயின் ஸ்டிங் ஆபரேஷனில், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் மல்லிகார்ஜுன் குபே, ஜி.டி.தேவேகவுடா  இருவரும் பண பேரம் நடத்தினார்கள். அவர்கள் இருவரும் ரூ.5 கோடி வரை கேட்டு பேரம் பேசியது அம்பலமாகி உள்ளது.

டைம்ஸ் நவ் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் முதல்வர் சித்தராமைய்யாவின் வலதுகரமாக திகழும் சுயேச்சை எம்.எல்.ஏ. வர்தூர் பிரகாஷ் பேரம் பேசும் காட்சிகள் உள்ளன. அவர் காங்கிரஸ் வேட்பாளருக்காக 12 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 5 மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை பணம் கொடுத்து பெற்றுத் தர முடியும்  என்று கூறியுள்ளது பதிவாகியுள்ளது. அவர் ஒவ்வொரு எம்.எல்.ஏ. ஓட்டுக்கும் ரூ.10 கோடி வரை பேரம் பேசுவது அம்பலமாகி உள்ளது.

இதற்கிடையே சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை பிடிக்க அவர்களது தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் நடத்தும் இந்த குதிரை பேரம் காரணமாக சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களும் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு காங்கிரஸ் வேட்பாளர் ராமமூர்த்திக்கு வாக்களிக்க தயாராகி வருகிறார்கள். மதச்சார்பற்ற  ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ஜமீர்அகமது கான் வெளிப்படையாகவே காங்கிரசுக்கு வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த பண பேரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால் 4 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர். ஸ்டிங் ஆபரேஷன் காட்சிகள் போலியானவை என்று கூறுகிறார்கள். என்றாலும் 4 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களிக்க ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை பேரம் பேசியது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடந்த பண பேரம் பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. ஸ்டிங் ஆபரேஷன் காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வரும் ஆணையம், தேர்தல் நடக்க இன்னும் ஒரு வாரம் இருப்பதால் அதற்குள் நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதித்து வருகிறது.

எடிட்டர் சாய்ஸ்