Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புறக்கணிப்பிலும் அதிருப்தியிலும் நடந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் பதவியேற்பு விழா…!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 19-வது முதல்வராக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நாராயணசாமி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டசபை தேர்தலில்,  காங்கிரஸ் -  தி.மு.க. கூட்டணி மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், புதுச்சேரி   வரலாற்றிலேயே முதன்முறையாக, புதுச்சேரி கடற்கரை அருகில் உள்ள காந்தி திடலில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 17 இடங்களைக் காங்கிரஸ்-திமுக கூட்டணிக் கைப்பற்றியது. மேலும் பல்வேறு நெருக்கடிகளைத் தாண்டி முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி முதல் அமைச்சராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடிக் கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் போன்றவர்கள் அமைச்சர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி திடலில், பதவியேற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காங்கிரஸ், திமுக தொண்டர்கள் சூழ்ந்திருந்த அரங்கில், சரியாக 11.45 மணிக்கு தி.மு.கவின் பொருளாளர் ஸ்டாலின் முதல் ஆளாக வந்தார். அவரைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கேஸ் இளங்கோவன், முன்னாள்  அமைச்சர் பொன்முடி ஆகியோரும் விழா அரங்கிற்கு வருகை தந்தனர்.

முன்னதாக முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், தனக்கு சபாநாயகர் பதவி வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக இரண்டாம் இடத்திலான அமைச்சர் பதவிதான் வேண்டும் என்றும் கோரி, டெல்லியில் போர்க்கொடி உயர்த்தினார். ஆனால் சபாநாயகர் பதவியை ஏற்க வேண்டும் என்று சொல்லி கட்சி மேலிடம் அவருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று விழாவிற்கு வந்த வைத்திலிங்கத்திற்கு முன் வரிசையில் இருக்கை போடப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் அவர் இருந்ததால் பார்வையாளர்களுக்காகப் போடப்பட்டிருந்த இரண்டாவது வரிசையில் சென்று அமர்ந்துவிட்டார். இறுதியாகத்தான் தமிழக-புதுச்சேரியின் காங்கிரஸ் பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக் வருகை தந்தார்.

சரியாக 11.55 மணியளவில் விழா அரங்கிற்கு வந்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, 12 மணியளவில் முதலில் நாராயணசாமிக்கு பதவிப் பிரமாணமும், அதைத் தொடர்ந்து ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து நமச்சிவாயம், மல்லாடிக் கிருஷ்ணராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக் கண்ணன் போன்றவர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

அனைத்து அமைச்சர்கள் பதவியேற்கும்போதும் அரங்கத்தில் இருந்த அவர்களது தொண்டர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர். மல்லாடிக் கிருஷ்ணராவிற்குக் கூட ஏனாமில் இருந்து வந்திருந்த தொண்டர்கள், அவர் பதவியேற்கும்போது அவரது பெயரைச் சொல்லி, கோஷம் எழுப்பினர். ஆனால் முதல் அமைச்சரான நாராயணசாமி பதவியேற்கும்போது நிசப்தம் மட்டுமே நிலவியது.

இந்த நிகழ்வு, முதல் அமைச்சர் நாராயணசாமியின் முகத்தை மேடையிலேயே இறுக வைத்தது. அதேபோல காங்கிரஸ் கட்சி எம்,எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான லட்சுமி நாராயணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதவி வழங்கப்படவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று நடந்த பதவியேற்பு விழாவிற்கும் வராமல் புறக்கணித்தார்.

அதேபோல தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில், பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் சார்பில் ஸ்டாலின் கலந்து கொண்டு அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தினார். ஆனால் புதுச்சேரியில் எட்டு இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக இருக்கும் என்.ஆர்.காங்கிரசும், அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் அதிமுகவும் இந்தப் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்துவிட்டன.
 

அனைத்து அமைச்சர்களும் தமிழில் பதவியேற்ற நிலையில் ஏனாம் தொகுதியைச் சேர்ந்த மல்லாடிக் கிருஷ்ணாராவ் தெலுங்கு மொழியிலேயே பதவியேற்றார். அனைவரும் பதவியேற்று முடிந்ததும் கவர்னர் கிரண்பேடி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல திமுக பொருளாளர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளாங்கோவன் போன்றவர்கள் மேடைக்கு சென்று நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விழா முடிந்ததும் சட்டசபைக்கு சென்ற முதல் அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட்டனர். தொடர்ந்து முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அது முடிந்ததும் நிருபர்களை சந்தித்த நாராயணசாமி, “புதுச்சேரியில் கடுமையான நிதிப் பற்றாக்குறை நிலவுவதால் விரைவில் மத்திய அரசை அணுகி கூடுதல் நிதியை கேட்க இருக்கிறோம். விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் 100 யூனிட் மின்சாரக் கட்டனம் செலுத்துபவர்களுக்கு 50% கட்டண சலுகை அளிக்கப்படும்" என்றவர், "வாகனங்களில் சைரன் பயன்படுத்தக் கூடாது என்று ஆளுநர் அறிவித்திருக்கிறார். நான் அரசு வாகனத்தையே பயன்படுத்தப் போவதில்லை. மற்றபடி இதுகுறித்து அமைச்சர்கள் அவர்வர்களுக்கேற்ப தனிப்பட்ட முடிவுகளை எடுப்பார்கள். மற்றபடி ஆளுநருடன் எங்களுக்கு எவ்விதமான மோதல் போக்குகளும் ஏற்படாது. முக்கியமாக கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை உடனே நடத்தப்படும்” என்றார்.

மொத்தத்தில் அதிருப்தியிலும் புறக்கணிப்புக்கும் இடையிலேயே நடந்து முடிந்தது நாராயணசாமியின் பதவியேற்பு விழா…!

படங்கள்: அ. குரூஸ்தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ