Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சிறுவன் ராகுல் காந்தி'... மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராஜஸ்தான்: பாஜக பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் மிகச் சிறப்பான ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆனால், சிறுவனான ராகுல் காந்தியால் அந்தச் சாதனைகளை புரிந்து கொள்ள முடியவில்லை' என்று மத்திய அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சி, ராஜஸ்தானின் கோடா நகரில் நடைபெற்றது. இதில், அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா, மத்திய எரிசக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா, “ புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதற்காக கல்வியாளர்களிடம் சம்பந்தப்பட்ட துறை ஆலோசனை நடத்தி வருகிறது. அதேநேரம், மக்களிடம் இருந்தும் இதுதொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் மத்திய அரசு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. ஆனால், அந்தச் சாதனைகளை சிறுவனான ராகுல் காந்தியால் புரிந்துகொள்ள இயலவில்லை" என்றார்.

" ஜன்தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டதன் மூலம், நாட்டில் லட்சக்கணக்கான மக்களால் வங்கிக் கணக்கு தொடங்க முடிந்தது. விவசாயிகளுக்காக புதிய பயிர்க் காப்பீட்டுக் கொள்கை கொண்டுவரப்பட்டது. ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தின்கீழ், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காக ரூ.7,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது' என அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது தெரிவித்தார்.

பிரதான எதிர்கட்சியான காங்கிரஸின் முக்கிய தலைவரை சிறுவன் என பாஜக மத்திய அமைச்சர் அவமதித்து பேசியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இதை பிரச்னையாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ