Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரண்பேடி அவர்களுக்கு... புதுச்சேரி வாசியின் மனம் திறந்த மடல்!

 

திப்பிற்குரிய கவர்னர் கிரண்பேடி அவர்களுக்கு, வணக்கம்… இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். என்ற பெருமைக்கு சொந்தக்காரரான தாங்கள், தற்போது எங்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு ஆளுநராகப் பொறுப்பேற்றிருப்பதை புதுச்சேரி மக்களின் சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.

புதுச்சேரிக்கு கவர்னராக அறிவிக்கப்பட்ட உடனேயே தங்களைப் பற்றிய விவரங்களைப் படித்து நான் வியந்துபோனேன். பாரதப் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் வாகனம் என்று தெரிந்தும், சிறு தயக்கமும் இன்றி, அதை கிரேனில் கட்டி தாங்கள் இழுத்துச் சென்றதும், பழம் தின்று கொட்டை போட்ட காவல்துறை உயர் அதிகாரிகளே போகத் தயங்கிய திஹார் சிறைச் சாலைக்கு பொறுப்பேற்று நீங்கள் சாதித்துக் காட்டியதும், பணி ஓய்வு பெற்ற பின்பும் அண்ணா ஹசாரேவுடன் சேர்ந்து ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் அமர்ந்தது என அனைத்தும் உங்கள் மதிப்பை உயர்த்தியது.

 


இவ்வளவு பெருமைகளைக் கொண்ட நீங்கள், எங்கள் ஊருக்கு வந்திருப்பது உண்மையில் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால், வந்த நிமிடத்திலிருந்து மக்களின் பிரச்னைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாமலேயே, நீங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும் அவசரகதியில் அள்ளித் தெளிக்கும் கோலம் போலத்தான் இருக்கிறது. மக்களோடு மக்களாக நிற்க நீங்கள் முயற்சி செய்வது, புதுவையின் தூய்மைக்காக துப்புரவுப் பணியில் களத்தில் நேரடியாக இறங்குவது என அனைத்தும் அசத்தல் அதிரடிகள். உண்மையை சொல்லப்போனால் நோயின் பிடியில் இருக்கும் புதுச்சேரிக்கு தேவையான உடனடி அறுவை சிகிச்சைகள் அவை. ஆனால், மொத்த அதிகாரத்தையும் கையில் எடுத்துக் கொண்டு நீங்கள் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்களை அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை.

 


தன்னிறைவு பெற்ற மாநிலமாக புதுச்சேரி மாற நீங்கள் முன் வைப்பது மாற்றத்தை. ஆனால், அந்த மாற்றமானது கீழ் மட்டத்தில் இருந்துதான் துவங்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்து அதிகார வர்க்கத்தின் நிலையையே நீங்களும் எடுத்து உள்ளீர்கள். அப்படியே கீழ் மட்டத்தில் இருந்து துவங்கினாலும், அது மேலே வருவதற்குள் மாற்றத்திற்கான உங்களின் தாகம் தணிந்துவிடும் என்பதே யதார்த்தம். 

 

'ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்ற ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்படும்' என்று அறிவித்தீர்கள். ஆனால் அடுத்த நாளே, 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' என்பதைப் போல விளிம்பு நிலையில் இருக்கும் சிறு வியாபாரிகளிடம்தான் உங்கள் அதிகாரிகள் போய் நின்றார்களே தவிர, அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் பெரிய துணிக்கடையையோ, பிளாட்பாரத்தை வளைத்துக் கட்டியிருக்கும் நகைக்கடையையோ, நகரின் பிரதான கழிவுநீர் வாய்க்காலோ, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் நட்சத்திர விடுதி போன்றவைகளோ அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் போனது ஏன்? பாதுகாப்பு என்ற பெயரில் இரவு நேரத்தில் நீங்கள் தங்கியிருக்கும் மாளிகையைச் சுற்றி நான்கு புற சாலைகளும் அடைக்கப்படுவது தெரியுமா மேடம் உங்களுக்கு?

'பத்து ரூபாய்க்குப் பொருள் வாங்கினாலும் ரசீது வாங்குங்கள்' என்று சொல்லும் தங்களுக்கு, எத்தனை பெட்ரோல் பங்குகள் மக்களிடம் இருந்து வசூலித்த வரியை அரசுக்கு செலுத்தாமல் ஏய்த்துக் கொண்டிருக்கிறது என்பதும், பெரும் தொழிற்சாலைகள் அனைத்தும் மின் கட்டனங்களை செலுத்தாமல் கோடிக்கணக்கான பணத்தை ஏப்பம் விடுகின்றன என்பதும் தெரியுமா? உங்கள் வேகத்தை இவர்களிடம் காட்டி அரசின் கஜானாவை நிரப்ப முயற்சி செய்திருக்கலாம், உங்களுக்கும் புண்ணியமாக போயிருக்கும்.

ஆனால் நீங்கள் செய்தது என்ன? தேர்தல் முடிந்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்பதற்கு முன்பாகவே அவசர அவசரமாக உத்தரவுகளை அள்ளி வீசினீர்கள். ஏன் இவ்வளவு அவசரம்? மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்கும் வரை காத்திருந்து, நீங்கள் செய்ய விரும்பும் சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் அதைப்பற்றி அவர்களுடன் விவாதித்து, அதை நிறைவேற்ற அவர்களுக்கு கால அவகாசங்களைக் கொடுத்திருக்க வேண்டும். அவர்கள் செயல்படவில்லை என்றால், நீங்கள் அப்போது தலையிட்டிருக்கலாம். 'மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கமே ஜனநாயகம்' என்பது எங்களைவிட ஐ.பி.எஸ் அதிகாரியான தங்களுக்கு நன்று தெரிந்திருக்கும். ஆனால், தங்களின் செயல்கள் இந்தக் கோட்பாட்டிற்கு சற்றும் பொருந்தவில்லை என்பதை நீங்கள் ஏன் உணரத் தவறினீர்கள் ?

யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால்தான், ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கே இல்லாத அதிகாரம், துணை நிலை ஆளுநரான தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரத்தை, மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளிவிட்டு, தங்களை மட்டுமே முன்னிறுத்தி செய்ய முயல்வதை சர்வாதிகாரத்தோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அதிகாரிகளால் அரைகுறையாக சொல்லப்பட்டதை வைத்துதான் அவசர சட்டங்களைப் பிறப்பித்திருக்கிறீர்கள் என்பது, கம்பன் கலையரங்கத்தில் நீங்கள் நடத்திய நிகழ்ச்சியில், 'பெண்களுக்கு இங்கு பாலியல் ரீதியான பிரச்னைகள் இருக்கிறதா?' என்று நீங்கள் கேட்டதில் இருந்தே அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தியாவையே உலுக்கிய ஆசிரம சகோதரிகளின் தற்கொலை, ஆசிட் வீச்சால் பலியான காரைக்கால் வினோதினி, அதே காரைக்காலைச் சேர்ந்த சிறுமி பாலியல் பாலாத்காரம் குறித்தெல்லாம் காவல்துறை உங்களுக்குத் தெரிவிக்கவில்லையா? 'யாருக்காகவும் போக்குவரத்து நிறுத்தப்படமாட்டாது' என்று நீங்கள் அறிவித்துவிட்டு, அரங்கைவிட்டு வெளியேறும்போதே உங்களுக்காக போக்குவரத்து  நிறுத்தி வைக்கப்பட்டது என்பது தெரியுமா?

மேலும், ' நகராட்சி ஆணையர் அல்ரெடி வரி வசூல் செய்ய கிளம்பிவிட்டார்'  என்று நீங்கள் சொன்னீர்கள். அப்படியானால் இங்கு ஆளுநர் ஆட்சிதான் அமலுக்கு வந்துவிட்டது என்பதை உறுதி செய்திருக்கிறீர்கள் அப்படித்தானே மேடம்? எனில் இது எப்படி மக்கள் ஆட்சி ஆகும்? ஆட்சியாளர்களுக்கும் உங்களுக்கும் உரசல் வந்துவிடுமோ என்று நாங்கள் பயப்படும் அளவிற்கு உங்கள் வேகம் இருக்கின்றது.

தற்போது புதிய அமைச்சரவை பொறுப்பேற்றிருக்கிறது. அவர்களுக்குடன் விவாதித்து செயல்படுத்தினால் மட்டுமே அனைத்தும் வெற்றித் திட்டங்களாக மாறும். இல்லையெனில் அனைத்தும் வெறுமனே கவர்ச்சிகர, வெற்று வேட்டு அறிவிப்புகளாக மட்டுமே கடந்து போகும். அப்படியே குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடைக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவதிலும், விவசாயத்தை அழிக்கும் ரியல் எஸ்டேட்டை அடக்குவதிலும் உங்களின் பார்வையைத் திருப்பினால் நன்றாக இருக்கும்.

ஆனால், புதுச்சேரியின் வளர்ச்சிக்கு நீங்கள் உண்மையாக பாடுபடுவீர்கள் என்று நாங்கள் இப்போதும் நம்புகிறோம். அதற்கு நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது, பா.ஜ.க பிரமுகர் என்று உங்களுக்கு இருக்கும் பிம்பத்தை உடைத்து, கிரண்பேடி ஐ.பி.எஸ் ஆக களத்தில் இறங்க வேண்டும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மேடம். நன்றி…

இப்படிக்கு பொதுமக்களில் ஒருவன்...

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close