Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார்! -தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: நாடாளுமன்றம், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தயார் என மத்திய சட்டத் துறையிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்படுவது புதிய முயற்சி கிடையாது. 1951-52 ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

அதன் பிறகு 1957, 1962, 1967 என ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இரு அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், 1968, 1969 ஆகிய ஆண்டுகளில் முன்கூட்டியே சில மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதால், இந்த நடைமுறை மாறி தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டியதாகி விட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு, ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய சட்ட அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது.

மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடத்தும் போக்கு மறைந்து செலவு குறையும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நலத்திட்ட பணிகள் முடங்குவது தவிர்க்கப்படும் என்றும், மத்திய படைகளின் பணிச்சுமை குறையும் என்றும் அந்த அறிக்கையில் நிலைக்குழு தெரிவித்திருந்தது.

நாடாமன்ற நிலைக்குழுவின் யோசனை குறித்து, தேர்தல் ஆணையத்திடம் மத்திய சட்ட அமைச்சகம் கருத்து கேட்டது. அதற்கு தேர்தல் கமிஷன் முதல்முறையாக தனது அதிகாரபூர்வ கருத்தை கடிதம் மூலம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில், ''ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது இயலாத காரியமில்லை. இந்த விவகாரத்தில் ஒருமித்த அரசியல் கருத்து எட்டப்பட்டால், இந்த யோசனையை முன்னெடுத்துச் செல்ல ஆணையம் தயாராக உள்ளது.

ஒரே நேரத்தில் அனைத்து மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கான கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகளை நிறுவ, நாடு தகுதி பெறுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதே சமயம் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக, கூடுதலாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும், யாருக்கு ஓட்டு பதிவானது என்பதை காட்டும் எந்திரங்களும் வாங்குவதற்கு ரூ.9 ஆயிரத்து 284 கோடியே 15 லட்சம் செலவாகும்.

அந்த எந்திரங்களை 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டி இருக்கும் என்பதால், அதற்கும் தனியாக செலவு பிடிக்கும். எந்திரங்களை பாதுகாத்து வைப்பதற்கும் செலவு ஏற்படும். மத்திய துணை ராணுவப்படையினர் அதிக அளவில் தேவைப்படுவார்கள்.

மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக, சில சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை முன்கூட்டியே முடிக்கவோ அல்லது பதவிக்காலத்தை நீட்டிக்கவோ செய்ய வேண்டி இருக்கும். அதற்கு அரசியல் சட்டத்தை திருத்த வேண்டி இருக்கும்" என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கருத்து பற்றி ஆய்வு செய்ய, அமைச்சர்கள் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு, கூடுதலாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை கொள்முதல் செய்வது உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ