Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முல்லைப்பெரியாறு விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டம் தேவையற்றது என்கிறார் பினராயி விஜயன்

 

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு விவகாரத்தில், அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தேவையற்றது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் முதல்வராக பதவி ஏற்ற பினராயி விஜயன், முல்லைப்பெரியாறு பிரச்னையில் இருவேறு கருத்துகளை வெளியிட்டு இருந்தார். அங்கு புதிய அணை கட்ட தேவையில்லை என முதலில் கூறியிருந்த அவர், பின்னர் அதை மறுத்தார்.

இப்படி முதலமைச்சரின் கருத்தில் குழப்பம் நிலவியதால், அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி உறுதியான முடிவு ஒன்றை அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், ''முல்லைப்பெரியாறில் புதிய அணை வேண்டும் என்பதே கேரளாவின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும் இந்த விவகாரத்தில், தமிழகம் மற்றும் மத்திய அரசின் துணையின்றி கேரளா தன்னிச்சையாக செயல்பட முடியாது

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தேவையற்றது. இந்த விவகாரத்தில் புதிய பிரச்னை எதுவும் இல்லாததால் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு இப்போது அவசியமில்லை. அப்படி எதுவும் புதிய பிரச்னை உருவெடுத்தால் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம்.

நூற்றாண்டுகள் பழமையான முல்லைப்பெரியாறு அணையின் உறுதி தொடர்பான கேரள அரசின் வாதத்தை தமிழகமும், உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளாததால், சர்வதேச நிபுணர் குழு மூலம் அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என கேரளா கோரிக்கை விடுத்துள்ளது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ