Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தரப்பிரதேசத்தில் குண்டர்கள் அராஜகம் அதிகரித்துள்ளது! -மோடி வேதனை

அலகாபாத்: உத்தரபிரதேசம் முழுவதும் குண்டர்கள் அராஜகம் அதிகரித்துள்ளது. அதனால், உத்தரபிரதேசம் பின்தங்கி உள்ளது என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்து உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில், 2 நாள் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நேற்று முடிவடைந்தது. செயற்குழுவை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, ''உத்தரப் பிரதேசத்தில் சமீபகாலத்தில் மாறிமாறி ஆட்சி அமைத்த சமாஜவாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஊழலின் உச்சத்தைத் தொட்டுவிட்டன. இப்போது ஆட்சியில் உள்ள சமாஜவாடி கட்சி, மாநிலத்தில் ஜாதிரீதியிலான வன்முறைகளையும், மதவாதத்தையும் தூண்டி வருகிறது.

உத்தரப் பிரதேசம் முழுவதுமே குண்டர்கள் அராஜகம் அதிகரித்துள்ளது. ஆட்சியில் இருப்பவர்களின் உறவினர்களும், அவர்களுக்கு வேண்டியவர்களும் அரசு நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் மோசமான நிலை நிலவி வருகிறது. இந்த அராஜகத்துக்கும், அட்டூழியத்துக்கும் முடிவு கட்டும் வகையில் மாநிலத்தில் பா.ஜ.க.வை மக்கள் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

மாயாவதி ஆட்சி நடத்தும்போது, முலாயம்சிங்கும், அவருடைய கட்சியினரும் மாயாவதி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவர். அதுபோல், முலாயம்சிங் கட்சியின் ஆட்சி மீது மாயாவதி ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவார். ஆனால் ஆட்சியில் அமர்ந்த பிறகு கடந்த ஆட்சியில் நடந்த ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் இருவரும் எடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் உண்டு.  அதன் அடிப்படையில்தான் உத்தரபிரதேசத்தில் ஆட்சி நடக்கிறது.

இப்படி இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்ததால், வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. எனவே, முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய பா.ஜ.க.வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். கடந்த 50 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை அளிக்க நான் பாடுபடுவேன். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள், வளர்ச்சி விகிதத்தில் முன்னணியில் உள்ளன. உங்கள் நலனுக்கு நாங்கள் தீங்கு விளைவிப்பதாக கருதினால், நீங்கள் எங்களை ஆட்சியைவிட்டு அகற்றிவிடுங்கள். எங்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு முழு உரிமையும் அளிப்போம்.

மாநிலத்தில் பெருவாரியாக உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு நான் உறுதியளிக்கிறேன். அரசுப் பணிகளில் இடைத்தரகர்களைத் தவிர்ப்பதற்காக 3,4-ஆம் நிலை அரசுப் பணிகளில் நேர்முகத்தேர்வை மத்திய அரசு நீக்கியுள்ளது உங்களுக்குத் தெரியும். இதனை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டுமென்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் உத்தரப் பிரதேசத்தின் நிலை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். மாநிலத்துக்கு நல்லது நடைபெற வேண்டும் என்றால் அது மக்களால் மட்டும்தான் முடியும்.

வளர்ச்சி இல்லாமல், ஊழலையோ மற்ற தீமைகளையோ ஒழிக்க முடியாது. நான் ஒட்டுமொத்த நாட்டையும் சுத்தப்படுத்தி கொண்டிருக்கிறேன். சுத்தப்படுத்தும்போது எழுந்த தூசியால், எங்களின் நல்ல பணிகளை யாராலும் பார்க்க முடியவில்லை. 2 ஆண்டுகால ஆட்சி குறித்து நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் எனக்கு முதல் வகுப்பில் தேர்ச்சி கிடைத்துள்ளது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எனக்கு ‘டிஸ்டிங்ஷன்’ அளித்துள்ளன.

பொது நன்மையை மனதில் கொண்டால், எதையும் சாதிக்கலாம். நாங்கள் அப்படித்தான் செய்துள்ளோம். உற்பத்தி அதிகரித்ததால், யூரியா தாராளமாக கிடைக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் இருளில் மூழ்கி கிடந்த 1,352 கிராமங்களுக்கு மின்சார வசதி அளித்துள்ளோம். மத்திய அரசிடம் இருந்து உத்தரப் பிரதேச அரசு ரூ.1 லட்சம் கோடி நிதி பெற்றுள்ளது. ஆனால் அது மக்களைச் சென்றடைந்ததா? என்பது தெரியவில்லை. அண்மைக் காலத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் பா.ஜ.க. அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையையும் பெற்று வருகிறது. எனவே உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி.

இந்த அதிகாரத்தில் நாம் மயங்கிவிடக் கூடாது. சமூகம் பயனடைய இந்த அதிகாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். முதலில், நாட்டை வலுப்படுத்துவது அவசியம். வெறும் கோஷங்களால் மக்கள் திருப்தி அடைந்துவிட மாட்டார்கள். நாட்டை நாம் எப்படி வலுப்படுத்துகிறோம் என்றுதான் பார்ப்பார்கள். அதனால் பா.ஜ.க. தொண்டர்கள், நாட்டுக்கு சேவை ஆற்றும் பணியில் 7 குணநலன்களை பின்பற்ற வேண்டும். உதவும் மனப்பான்மை, சமத்துவம், பொறுமை, ஒருங்கிணைப்பு, நேர்மறை எண்ணம், இரக்க சிந்தனை, கலந்துரையாடும் போக்கு ஆகியவைதான் 7 குணநலன்கள். நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்வதுதான் நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close