Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உல்லாச பங்களா... ஆடம்பர கார்கள்.. கிறிஸ் கெயிலையே அசத்திய விஜய் மல்லையா

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன்' கிறிஸ் கெயில். ஒரு ஆட்டத்தில் முதல் 6 பந்துகளை அடிக்காமல் வீணடித்தாலும் அடுத்த 10 பந்துகளை சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசி அதனை சரி செய்யும் வீரர். ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் தெறி வீரர்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்த பிறகு அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் அணி உரிமையாளரான விஜய் மல்லையாவின் கோவா பங்களாவுக்குச் சென்று ஒருமுறை 5 நாட்கள் தங்கியுள்ளார். அந்த ஆச்சர்ய அனுபவத்தை தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

'சிக்ஸ் மெஷின்' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள இந்நுாலில், வங்கி மோசடியில் சிக்கி தற்போது தலைமறைவாகியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கோவா பங்களா பற்றி ஆச்சர்யமான பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்த பிரம்மாண்ட பங்களா பற்றி தனது அணியின் மேலாளர் ஜார்ஜ் அவினாஷ் மூலம் கேள்விப்பட்டதாக குறிப்பிட்டுள்ள கெய்ல், கோவா பங்களாவில் தான், 5 நாட்கள் ஒரு ராஜா போன்றே வாழ்ந்ததாக நெகிழ்ந்திருக்கிறார்.

'பெரிய ஹோட்டல்களையெல்லாம் விடவும் இந்த வில்லா பெரியதாக இருந்தது. அதுவரை நான் பார்த்ததிலேயே மிகவும் குளிர்ச்சியாக ஒரு வீடு இதுதான். இந்த மாளிகை ஒரு ஜேம்ஸ் பாண்ட், பிளே பாய் மேன்ஷன் போல இருந்தது. வெள்ளை கான்க்ரீட் மற்றும் கண்ணாடிகள் நிரம்பிய பிரம்மாண்டம் நிரம்பி வழியும் இடமாக அது இருந்தது. எதைப்பார்த்தாலும் அதை ரசிக்கும்படியாக இருந்தது. அத்தனை கலை ரசனை. நான் எனக்குள்ளேயே ‘கிறிஸ் இது மிகவும் சுவாரசியாமாக இருக்கப் போகிறது’ கூறிக்கொண்டேன்.

அந்த ஒட்டுமொத்த வில்லாவும் 5 நாட்கள் என்னுடையதானது. எங்கு சென்றாலும் என்னுடன் இரண்டு பட்லர்கள் கூடவே வந்தனர். ஒரு ராஜா போல் பவனி வந்தேன். முதல் நீச்சல் குளம், இரண்டாம் நீச்சல் குளம், வராண்டாவில் நீண்ட நடை, பிறகு மீண்டும் நீச்சல் குளம், கிங்பிஷர் பீர்கள் வந்து கொண்டேயிருந்தன. இந்த ஒரு இடத்தில்தான் கிங் பிஷர் பீருக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது.
கோல்ஃப் வண்டியை எடுத்துக் கொண்டு உலா வந்தேன், சமையல்காரர் என்னிடம் வந்து என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்கும் போது நான் மெனு என்பேன், அவர் 'மெனுவெல்லாம் இல்லை, நீங்கள் கேட்பது கிடைக்கும். நீங்கள்தான் மெனு' என்று இன்ப அதிர்ச்சி தந்தனர்.

அது எனக்கு ஒரு புது உலகமாக இருந்தது. இதற்குள்ளும் புதிய உலகங்கள் பிரமிப்பில் ஆழ்த்தின. ரோலிங்டன் டவுன் 1சி, செயிண்ட் ஜேம்ஸ் சாலையிலிருந்து வந்த ஒரு சிறுவனுக்கு (தனக்கு) இப்படியொரு உலகம் இருப்பதே அதுவரை தெரிந்திருக்கவில்லை.

உள்ளே சினிமா தியேட்டர் உள்ளது. அங்கே செல்ல வாய்ப்பு கிடைத்தது. நிறைய கார்கள், மிகப்பெரிய மெர்சிடிஸ் உட்பட.  ஆனால் அங்கிருந்த கார்கள் என்னைக் கவரவில்லை. அங்கிருந்தவற்றில் என்னைக் கவர்ந்தது ஒரு மிகப்பெரிய பைக். 3 சக்கர ஹார்லி-டேவிட்சன் பைக்.

அந்த பைக்கை விஜய் மல்லையா வாங்கிய கதையும் சுவாரஷ்யமானது. அமெரிக்காவில் ஒருநாள் மல்லையா காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஒருநபர் 3 சக்கர பெரிய பைக்கில் வருவதை கண்டார். அந்த பைக் அவரை பெரிதும் கவர்ந்துவிட்டது. உடனேயே அந்த பைக்கில் வந்த நபரை தடுத்து நிறுத்தி, 'தனக்கு இந்த பைக் வேண்டும்' என்றார். அவர் நினைத்ததை சாதித்துவிட்டார். அவர் என்ன விரும்பினாரோ அது அங்கேயே அவருக்குக் கிடைத்தது. அந்த இடத்திலேயே விலை பேசி அந்த இடத்திலேயே பைக்கை வாங்கினார். உடனே இந்தியாவுக்கு அந்த பைக் அனுப்பப்பட்டது. அங்கிருந்து கோவா வில்லாவுக்கு வந்தது இந்த 3 சக்கர பைக்.

நான் இதுவரை பைக் ஓட்டியதில்லை. மேலும் 3 சக்கர மோட்டார் பைக் ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை. அதை எப்படி ஓட்டுவது என பட்லர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தனர். கிங்பிஷர் வில்லா ஒரு ரேஸ் டிராக் போல் பரந்து விரிந்தது எனக்கு வசதியாக இருந்தது.

அங்கு எனக்கு என்ன கேட்டாலும் கிடைத்தது. ‘சார் யானை மீது சவாரி செய்ய ஆசையா?’ என்றனர். யானை இருக்கிறதா என்றேன், விஜய் மல்லையாவிடம் யானை இல்லை, ஆனால் யானை வைத்திருக்கும் நண்பர்கள் அவருக்கு உண்டு. உடனேயே நான் யானை மீது பவனி வந்தேன்” என்று விஜயமல்லையா பங்களாவில் தான் கழித்த அனுபவத்தை அந்த நுாலில் பதிவு செய்திருக்கிறார் கிறிஸ்.

பங்களாவைப்பற்றி இறுதியாக குறிப்பிடும் கெய்ல், தனக்கு அங்கிருந்து கிளம்ப மனமில்லை. என்றாலும் அங்கிருந்து புறப்பட்டுத்தானேயாக வேண்டும்” என்று தன் அனுபவத்தை விவரித்துள்ளார் தனது சுயசரிதையில்.

கிறிஸ் கெயிலால் இப்படி சிலாகிக்கப்பட்ட 'கோவா வில்லா' பங்களா  விஜய் மல்லையா வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் வங்கி எடுத்த நடவடிக்கையின் படி 90 கோடிக்கு ஏலம் விடப்பட்டுவிட்டது தனிக்கதை.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ