Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச யோகா தினம்: ஆதாயமில்லாத தியாகத்தை கற்றுத் தரும் வழிமுறையே யோகா! -பிரதமர் மோடி

சண்டிகர்: ஆதாயமில்லாத தியாகத்தை கற்றுத் தரும் வழிமுறையே யோகா என்று சர்வதேச யோகா தினத்தில், சண்டிகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. பொதுச்சபை கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் அன்றைய தினம் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், உலகம் முழுவதும் இன்று 2-வது ஆண்டாக சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, இந்தியா உள்பட 135-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில், யோகா நிகழ்ச்சியை பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடந்த யோகா நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். இதில், 150 மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, ''யோகா தினம் ஒரு சர்வதேச நிகழ்ச்சியாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆதாயமில்லாத தியாகத்தை கற்றுத் தரும் வழிமுறையே யோகா. யோகாவின் சக்தி மற்றும் பயனை அனைவரும் அறிந்து, அதை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

யோகா என்பது மதம் சார்ந்த பயிற்சி அல்ல. அது, நமது முன்னோர்கள் உலகிற்கு வழங்கியுள்ள விலைமதிப்பற்ற ஒன்று. இந்தியாவின் புராதன பொக்கிஷமான யோகாவை, உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க, யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அனைவரும் முன் வர வேண்டும்" என்றார்.

காலை 7 மணிக்கு தொடங்கிய யோகா நிகழ்ச்சிகள், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. யோகாசன நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி, நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி உள்ளிட்ட 57 அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இதேபோல், சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகே  நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், பள்ளி, மாணவர்களும் திரளான அளவில் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில், யோகாவின் சிறப்பம்சங்கள் மற்றும் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் யோகா தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் 6 ஆயிரம் பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

எடிட்டர் சாய்ஸ்