Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராஜன் எக்ஸிட்: அரசுக்கு சாதகமான ஆர்.பி.ஐ கவர்னரை தேடுகிறதா மோடி அரசு? #R3Exit

 

ஆர்.பி.ஐ கவர்னர் பதவி,  இந்திய ரூபாய் நோட்டுகளில் கையொப்பமிடும் அளவுக்கு மிக உயர்ந்த பதவி. இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு இப்பதவியில் இருப்பவருக்கு உண்டு.

இதனை சிறப்பாக செய்து வரும் ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் வருகிற செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில்,  தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்றும், மீண்டும் அப்பதவியில்  தொடரப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே பி.ஜே.பி தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, ரகுராம் ராஜன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து  சர்ச்சையை கிளப்பி வந்தார்.  சுவாமி முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன? ரகுராம் ராஜன் தனது பதவி காலத்தில் என்ன செய்துள்ளார்? அவரது விலகல் முடிவுக்கு காரணம் என்ன? அடுத்த ஆர்.பி.ஐ கவர்னராக வர யாருக்கெல்லாம் வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம்...

சுவாமி vs ராஜன்:


 சுப்ரமணியன் சுவாமி,  ரகுராம் ராஜன் மீது குற்றச்சாட்டுகளை  முன்வைத்து ஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதினார். அதில், " ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு தீங்கு இழைத்துள்ளார். இதன் காரணமாக அவை அழிவதுடன், பல ஆயிரக்கணக்கான திறன் குறைந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும். ரகசியமான, பிரச்னைகளுக்கு உரிய நிதி சம்பந்தப்பட்ட தகவல்களை, அவர் தனது சிகாகோ பல்கலைக்கழக இ-மெயில் முகவரி மூலம் பாதுகாப்பற்ற வகையில், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நபர்களுக்கு அனுப்பி வருகிறார்" என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அதன்பிறகும் அவ்வப்போது பல குற்றச்சாட்டுக்களை கூறி,  ரகுராம் ராஜன் மீதான எதிர்ப்பலைகளை உருவாக்கினார் சுவாமி. அது மட்டுமின்றி வருகிற டிசம்பரில், ரகுராம் ராஜன் பற்றிய சர்ச்சை வெடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

என்ன செய்தார் ரகுராம் ராஜன் ?


ரகுராம் ராஜன் பதவியேற்றது செப்டம்பர் 4, 2013. அவர் பதவியேற்ற காலத்திலிருந்து இந்தியாவின் பணவீக்கம், மற்ற ஆர்.பி.ஐ கவர்னர்கள் காலத்தில் இல்லாத அளவுக்கு மிகச்சிறந்த நிலையை அடைந்தது. அதேபோல் வட்டிவிகிதத்தையும்  குறைந்த அளவிலேயே தொடர்ந்து வருகிறார். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது. இதுவரை இருந்த ஆர்.பி.ஐ கவர்னர்களின் செயல்பாடுகளிலேயே ரகுராம் ராஜனின் செயல்பாடுதான் சிற‌ந்தது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

 

 

ஆர்.பி.ஐ கவர்னர் பணவீக்கம் (%) வட்டி விகிதம் (%) ஜி.டி.பி (%)
எஸ். வெங்கடராமன் (1990-92) 12.7 16.5 3.9
சி.ரெங்கராஜன் (1992-97) 6.6 15.3 6.5
பிமல் ஜலான் (1997-03) 4.7 12.5 5.7
வொய்.வி.ரெட்டி(2003-08) 5.9 12.4 8.5
டி.சுப்பாராவ்(2008-13) 7.3 10.2 6.9
ரகுராம் ராஜன்(2013-இதுவரை) 1.9 9.9 7.1பதவியில் நீடிக்க மறுப்பது ஏன்?

அரசியல் காரணங்களால் ரகுராம் ராஜன் இரண்டாவது முறையாக  பதவியில் நீடிக்க விரும்பவில்லை எனக் கூறப்பட்டாலும், 'மோடிக்கு ரகுராம் ராஜன் போன்ற அறிவாளிகளை வைத்திருக்க பிடிக்காது'  என ராகுல்காந்தியும், 'பல ஊழல்களை மறைக்க ராஜனை கழற்றிவிடுகிற‌து பி.ஜே.பி'  என காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு சுவாமி தரப்பில், ' ராஜன் காங்கிரஸின் ஏஜென்ட். அவர் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவில்லை'  என பதில் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில்,  " எனக்கு இரண்டாவது முறையாக  ஆர்பிஐ கவர்னராக நீடிக்கும் எண்ணம் இல்லை. இதுநாள் வரையில் மிகவும் சரிந்து கிடந்த  இந்திய பொருளாதாரத்தை மேல் நோக்கிய வளர்ச்சிக்கு கொண்டு சென்றது மகிழ்ச்சியளிக்கிறது" என்ற செய்தியோடு தன்னை மையமாக வைத்து நடக்கும் இந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரகுராம் ராஜன்.


அடுத்த ஆர்.பி.ஐ கவர்னர் யார்?

இதனையடுத்து ரகுராம் ராஜன் இடத்தை பூர்த்தி செய்யும் அடுத்த நபர் யார்? என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எழுந்துள்ளது.

உர்ஜித் படேல்

தற்போது ஆர்.பி.ஐ-யின் துணை கவர்னராக இருக்கும் இவர், பணவீக்க  குறைப்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவமிக்கவர். ஐ.எம்.எஃப் மற்றும் போஸ்டன் குழுமங்களில் பணியாற்றியுள்ளார். மோடியின் மதிப்புமிக்க நபர்களில் ஒருவர்.

அருந்ததி பட்டாச்சார்யா:

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் தலைமைப் பதவியை ஏற்ற முதல் பெண் இவர்தான். பாரத  ஸ்டேட் வங்கியை நிர்வகிக்கும் இவர், ஆர்.பி.ஐ கவர்னர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுபவர்களில் முதன்மையானவர். எஸ்பிஐ-யின் ஐ.டி வளர்ச்சிகளில் இவரது பங்கு அளப்பரியது.

அரவிந்த் பனகரியா:


நிதித்துறை படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவர்.  திட்டக்குழுவை மாற்றியமைத்து 'நிதி ஆயோக்' என்ற அமைப்பை ஆரம்பித்தபோது மோடியின் டாப் சாய்ஸ் இவர்தான். நிதி ஆயோக் தலைவரான இவர், ஆர்.பி.ஐ-யை  நிர்வகிக்கும் பட்டியலில் முன்னிற்கிறார்.

அர்விந்த் சுப்ரமணியன்:

தலைமை பொருளாதார ஆலோசகராக இருக்கும் இவர், மோடி பதவியேற்ற பிறகு இப்பதவிக்கு வந்தார். ராஜனை போலவே ஐ.எம்.எஃப் பில் முக்கிய பொறுப்புகளை வகித்த அரவிந்த் சுப்ரமணியன். ராஜனை போன்ற திறமையான நிர்வாகி. அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு பிறகு இவருக்குதான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூற‌ப்படுகிறது.இது தவிர முன்னாள் ஆர்பிஐ துணை கவர்னரான ராகேஷ் மோகன், சுபிர் கோக் ரன், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அசோக் லாஹ்ரி, தேசிய பங்குச் சந்தையின் தலைவரான அசோக் சாவ்லா, பொருளாதார அறிஞரான விஜய் கேல்கர், பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் சக்திகாந்த தாஸ் ஆகியோரது பெயர்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.

டாப் லிஸ்டில் இருக்கும் அனைவருமே மோடி அரசால் விரும்பப்படும் நபர்கள். அவர்களது வருகையையே அரசு பெரிதும் விரும்புகிறது என்றும் கூற‌ப்படுகிறது. 'ராஜன் இடத்தை பூர்த்தி செய்வது கடினம்.  அரசின் ஆணைக்கு இணங்காமல் வளர்ச்சிக்கு எது தேவையோ அதனை செய்யும் விடாப்பிடியான ரகுராம் ராஜனின் செயல்களை அவருக்கு பின் வரும் இவர்கள் செய்வார்களா?'  என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தான் விரும்பும் காரியங்களை சாதிப்பதற்காக மோடி அரசு, ரகுராம் ராஜனை கழற்றிவிடுகிறது என்றும் குற்றம்சாட்டுபவர்கள்,  அடுத்த  ஆர்.பி.ஐ கவர்னர், பி.ஜே.பி விசுவாசியாக இருக்க வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம் என்கின்றனர்.

அடுத்த ஆர்.பி.ஐ கவர்னராக வரக்கூடிய நபர் அரசின் நல்ல விஷயங்களை ஆதரித்தும், அதேசமயம் அரசின் தவறான கோரிக்கைகளை நிராகரித்தும்,  தொழிற்துறை மற்றும் மக்களை கருத்தில் கொண்டும் தன் பணியை தொடர்ந்தால் இந்தியா, பொருளாதார ரீதியான வளர்ச்சியை அடையும்.

ச.ஸ்ரீராம்

ஓவியம் : ஹாசிப்கான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close