Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரகுராம் ராஜனை தொடர்ந்து சுப்ரமணியன் சுவாமியின் அடுத்த இலக்கு இவர்தான்!

புதுடெல்லி: ரகுராம் ராஜனை தொடர்ந்து, சுப்ரமணியன் சுவாமியின் கவனம் அரவிந்த் சுப்ரமணியன் மீது திரும்பி உள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்ரமணியன் சுவாமி போர்க்கொடி தூக்கினார்.

" ரகுராம் ராஜன், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னராக ரகுராம் ராஜன் இருக்கக்கூடாது. அவர் அமெரிக்காவின் கிரீன் கார்டு பெற்ற குடிமகன். எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்றும் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து மீண்டும் பதவி நீட்டிப்பு பெற விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் அறிவித்தார்.

இந்நிலையில், ரகுராம் ராஜனை தொடர்ந்து சுப்ரமணியன் சுவாமியின் அடுத்த இலக்காக, இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் உள்ளார்.

இது தொடர்பாக சுப்ரமணியன் சுவாமி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,'' அமெரிக்க மருந்து கம்பெனிகள் அதிக லாபம் பெற வேண்டுமெனில் அமெரிக்கா தனது கொள்கைகளை இந்தியாவுக்கு எதிராக வகுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக லாபம் அடைய முடியும் என கூறியது யார், அரவிந்த் சுப்ரமணியன்தானே? அவரை உடனே பதவி நீக்கம் செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

சுவாமியின் இந்தப் பதிவு, மத்திய அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜனுக்கு பதில் அரவிந்த் சுப்பிரமணியன் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்ததுதான்.

ஆக அரவிந்த் சுப்ரமணியன், இந்தியாவின் பொருளாதார ஆலோசகாரா இருக்கக் கூடாது என அவர் மறைமுகமாக தெரிவித்து உள்ளார். இன்னும் சில நாட்களில், ரகுராம் ராஜனிடம் இருந்து வந்த பதிலைப் போலவே, அரவிந்த் சுப்ரமணியனிடமிருந்தும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியே போனால் இந்தியா, தலைசிறந்த பொருளாதார நிபுணர்களை இழக்க வேண்டியதிருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரவிந்த் சுப்ரமணியன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ