Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமரை விமர்சித்து கைதான கர்நாடக பேராசிரியர் சஸ்பெண்ட்: மைசூர் பல்கலைக்கழகம் அதிரடி!

மைசூர்: ராமரை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மைசூர் பல்கலைக்கழக பேராசிரியர் மகேஷ் சந்திர குரு என்பவர், பல்கலைக் கழகத்திலிருந்து சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம், மைசூரு பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் மகேஷ் சந்திர குரு. ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் பல நூல்களை எழுதியுள்ள இவர், தேசிய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

கர்நாடகா பணியாளர் தேர்வாணையத்திலும், மத்தியப் பணியாளர் தேர்வாணையத்திலும் உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் நடந்த பயிற்சிப் பட்டறையில் ராமாயணம் குறித்து உரையாற்றினார். அப்போது ‘ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான ராமன், கடவுளாக வணங்கப்படுபவர். ஆனால் அவரே சீதையின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை குற்றவாளிபோல‌ நடத்தினார். ஆனால் ஊடகங்கள், ராமரை கடவுளாக மாற்றிவிட்டன. எனவே ராமன் மனித உரிமை மீறல் களில் ஈடுபட்டுள்ளார் ''என்று அவர் பேசியதாக தெரிகிறது. இது சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை எழுப்பியது.

இதுகுறித்து கர்நாடக சர்வோதய சேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத் துவா அமைப்பினர், இந்திய தண்டனை சட்டம் 295-ஏ பிரிவின் (வன்முறையை தூண்டும் பேச்சு) கீழ் மகேஷ் சந்திர குரு மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதேபோல 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பகவத் கீதையை எரிக்க முயற்சித்த விவகாரத்திலும் மகேஷ் சந்திர குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்விரு வழக்குகளையும் விசாரித்த மைசூரு நீதிமன்றம், மகேஷ் சந்திர குருவை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி போலீஸார் அவரை கைது செய்து நேற்று முன் தினம் மைசூரு மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மைசூரு பல்கலைக் கழகம் பேராசிரியர் மகேஷ் சந்திர குருவை பேராசிரியர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. ‘‘அரசு ஊழியர் குற்ற வழக்கில் கைதானால் 48 மணி நேரத்துக்குள் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கில் ஜாமீன் கிடைத்து வெளியே அவர் வந்தவுடன், சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும்’’ என்று பல்கலைக்கழக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பேராசிரியர் மகேஷ் சந்திர குரு கைது விவகாரம், இந்தியா முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த நடவடிக்கையை கண்டித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ