Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கணக்கில் காட்டாத பணம், சொத்து விவரங்களை செப்.30க்குள் தெரிவியுங்கள்! -மோடி எச்சரிக்கை

புதுடெல்லி: கணக்கில் காட்டாத பணம், சொத்து வைத்திருப்போர், செப்டம்பர் 30–ம் தேதிக்குள் அதுபற்றிய தகவலை அரசுக்கு தெரிவிக்காவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்றும் , 'மனதில் இருந்து பேசுகிறேன்' (மன் கீ பாத்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி அவர் நேற்று பேசியபோது, ''கணக்கில் காட்டாத பணம், சொத்து வைத்து இருப்பவர்களுக்காக மத்திய அரசு சிறந்த வாய்ப்பு ஒன்றை அளித்து இருக்கிறது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 30–ம் தேதிக்குள் அதுபற்றிய தகவல்களை வருமான வரி அதிகாரிகளுக்கு தெரிவித்து, அபராதத்தை செலுத்தினால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதை தவிர்த்து விடலாம்.

இப்படி தானாக முன்வந்து கணக்கில் காட்டாத பணத்துக்கு அபராதம் செலுத்துபவர்களிடம் அவர்களுக்கு பணம் எப்படி வந்தது, சொத்து எப்படி சேர்ந்தது என்பது போன்ற விசாரணை எதுவும் இருக்காது என்று உறுதியாக கூறுகிறேன். அதனால்தான் வெளிப்படையான நடைமுறையில் பங்கேற்பதற்கு இது உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு என்று சொல்கிறேன். எனவே நாட்டு மக்கள் அனைவருக்கும், வருகிற செப்டம்பர் 30–ம் தேதி என்பதுதான் கடைசி வாய்ப்பு.

பாஜக  எம்.பி.க்கள் இந்த விதிமுறைக்கு கட்டுப்படாமல்போய் செப்டம்பர் 30–ம் தேதிக்கு பிறகு கணக்கில் காட்டாத பணம், சொத்து போன்றவற்றில் ஏதாவது பிரச்னையை எதிர்கொள்ள நேர்ந்தால் அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவி கிடைக்காது. எனவே இந்த காலஅவகாசத்தை பயன்படுத்திக் கொண்டு அதற்கு பிறகு பிரச்னைகள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

வருமானத்துக்கு வரி கட்டாமல் இருந்தால் தப்பிவிடலாம் என்ற நிலை முன்பு இருந்தது. இப்போது காலம் மாறிவிட்டது. தற்போது வரி செலுத்துபவர்களுக்கு, மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றுவதில் அவ்வளவாக சிரமம் இல்லை. என்றாலும் கூட வரி செலுத்தாமல் ஏமாற்றி விடலாம் என்கிற எண்ணம் இன்னும் பலரிடம் இருக்கிறது.

விதிமுறைகளை மீறிச் செல்லும்போது, நாம் அமைதியை இழக்க நேரிடுகிறது. இதனால் ஒரு சிறிய மனிதர்கூட நமக்கு தொந்தரவு அளிக்க இயலும். அதுமாதிரி நடக்க நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? அரசாங்கத்துக்கு ஏன் நமது முறையான வருமானம், சொத்து பற்றி சரியான தகவல்களை அளிக்கக்கூடாது? இதை செய்வதன் மூலம் கடந்த கால சுமைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்குமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

வருமான வரித் துறை, சுங்க இலாகா, கலால் வரித் துறை அதிகாரிகளை சமீபத்தில் டெல்லியில் சந்தித்துப் பேசினேன். அப்போது, நாட்டு மக்களை திருடர்கள் போல பார்க்கக்கூடாது. அவர்கள் மீது நம்பிக்கை வைத்து சட்டத்தை மதித்து நடப்பவர்களாக உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் இந்த கூட்டத்தில் வற்புறுத்தினேன். 125 கோடி மக்கள் தொகையை கொண்ட நமது நாட்டில் வெறும் 15 லட்சம் பேர்தான் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களாக இருக்கின்றனர்.

இதை யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடியாது. பல பெரிய நகரங்களில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கும் ஏராளமானோரை நம்மால் பார்க்க இயலும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் முன்பாக கடைசி வாய்ப்பை அளிக்க அரசு விரும்புகிறது. எனது சகோதர சகோதரிகளே, தற்போது உங்களுக்கு கணக்கில் காட்டாத பணம், சொத்துகளை அறிவிக்க ஒரு அருமையானதொரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் செப்டம்பர் 30–ம் தேதிக்கு பிறகு கடுமையான விளைவை சந்திக்கும் நிலை உருவாகும். நீங்கள் அந்த நிலைக்கு செல்லக்கூடாது என்பதையே விரும்புகிறேன்.

எனது அரசின் செயல்பாடு குறித்து, மக்கள் மதிப்பீடு செய்யவேண்டும் என சில இளைஞர்கள் சவாலாக விடுத்தனர். இதுபற்றி எனது மூத்த அமைச்சர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் இது வேண்டாம், இந்த தொழில்நுட்ப யுகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் அதை தவறாக பயன்படுத்திவிட முடியும் என்று கவலை தெரிவித்தனர். ஆனாலும் இந்த அபாயகரமான முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன். அந்த மதிப்பீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த மதிப்பீடு, ‘ரேட் மை கவர்ன்மெண்ட்' மைகவ். இன் (mygov.in) இணையதளத்தின் மூலம் பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் எனது கேள்விகளுக்கு 3 லட்சம் பேர் விடை அளித்து இருக்கின்றனர். தேர்தலுக்கு பிறகு எடுக்கப்படும் கருத்து கணிப்பைவிட இது மிகப்பெரியதாக இருக்கிறது. இந்த மதிப்பீட்டுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. அதை ஊடகங்களிடம் விட்டுவிடுகிறேன்.

1975 ஜூன் 26 அன்று (நெருக்கடி நிலையை மறைந்த பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் பிரகடனப்படுத்திய தினம்) நமது மக்களின் குரல் ஒடுக்கப்பட்டது. அதே நாளில்தான் இன்று எனது அரசு சிறப்பாக செயல்படுகிறதா அல்லது மோசமாக உள்ளதா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என்று கூறுகிறேன். இதுதான் நமது ஜனநாயகத்தின் பலம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ