Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பீகாரில் மாணவ- மாணவிகள் சிறைக்கு செல்ல பெற்றோரே காரணம்!

பீகாரில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், கலை பாடப்பிரிவில், 500-க்கு 444 மதிப்பெண் பெற்று ரூபி ராய் என்ற மாணவி  முதலிடம் பெற்றிருந்தார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், அரசியல் அறிவியல் பாடத்தில் சமையல் பற்றிய பாடங்கள் இடம் பெற்றிருக்கும் என  கூறியது சந்தேகத்தை கிளப்பியது.  அந்த பேட்டி சந்தேகத்தை எழுப்ப, அவரை மறுதேர்வு எழுதுமாறு உத்தரவிடப்பட்டது. நேற்று முன்தினம் அவர் மறுதேர்வு எழுதினார். தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது  நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

போலீசார் விசாரணையில், ''  ஒரு சராசரி மாணவியாகவே மதிப்பெண்களை பெற விரும்பினேன். நான் ஒரு கிராமத்து மாணவி. எனக்கு மாநில அளவில் எல்லாம் முதலிடம் பிடிக்க வேண்டுமென்ற எண்ணம்  இல்லை என்று ரூபி ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் ரூபி ராய் படித்து வந்த விசுன் ராய் கல்லூரி முதல்வர் பச்சச்சா ராய்,' ரூபி ராய்க்கு தூரத்து சொந்தமாம்.  ரூபியின் தந்தை இந்த விஷயத்தில் தலையிட்டிருக்க  வாய்ப்பிருக்கலாம் என்பதையும்  ரூபி ராய் மறுக்கவில்லை.

ரூபி ராய்க்கு நடத்தப்பட்ட மறு தேர்வில், கவிஞர் துளசி தாஸ் பற்றிய கேள்விக்கு ' துளசிதான் பாராயணம்' என்ற ஒரே வார்த்தைதான் எழுதியிருந்தாராம். துளசிதாஸ் பற்றிய கட்டுரை எழுதவும் என்றால் படித்தது எல்லாம் மறந்து விட்டதாக கூறியுள்ளார்.

பீகாரை பொறுத்த வரை மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டுமென்றால் ரூ,15 லட்சம் கொடுத்தால் போதுமாம். பெயிலானவரை பாஸாக்க ரூ 10 லட்சம் கொடுத்தால் போதும் என்ற நிலை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய மனித வளத்துறை இணை அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹா, '' மாணவி  ரூபி ராய் சிறைக்கு சென்றதற்கு அவரது பெற்றோரும் அதிகாரிகளுமேதான் காரணம். பெற்றோரின் அதீத ஆசையும் கல்வித்துறை அதிகாரிகளின் பண ஆசையுமே பீகாரின் கல்வித்துறையை இந்தளவுக்கு  சீரழித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரூபி ராய் மட்டுமல்ல அறிவியல் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சவுரப் சேஸ்தா, மாநில அளவில் 3வது இடம் பிடித்த ராகுல் குமார், விசுன் ராய் கல்லூரி முதல்வரின் மகள் ஷாலினி ராய் ஆகியோரும் சிறைக்கு செல்ல நேர்ந்துள்ளது.



 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ